Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: மருது – வேகத்தில் எருது! வன்முறைக் காட்சிகள் அதிகம்!

திரைவிமர்சனம்: மருது – வேகத்தில் எருது! வன்முறைக் காட்சிகள் அதிகம்!

970
0
SHARE
Ad

main1கோலாலம்பூர் – ‘கொம்பன்’ முத்தையா இயக்கத்தில் விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் படம் ‘மருது’. கிராமத்து மண் வாசனை வீசும் கதையை தனக்கே உரிய பாணியில் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் முத்தையா.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஒரு கிராமம். அம்மண்ணுக்கேற்ற வீரமும், கோபமும், தன்மானமும், பெண்களை சாமியாகப் பார்க்கும் குணத்துடனும் ஜல்லிக்கட்டு காளையாக திமிரிக் கொண்டு திரிகிறான் மருது. அப்பத்தா வளர்ப்பு.. அவருக்கு ஒன்று என்றால் துடித்துப் போகும் மருது, சீண்டியவர்களை ஒரு கை பார்க்காமல் விடுவதில்லை.

இப்படியான மருதுவின் வாழ்க்கையில், கதாநாயகி ஸ்ரீதிவ்யா குடும்பத்தினர் நுழைகின்றார்கள். அந்த ஊரின் மிகப் பெரிய ரௌடியான ரோலக்ஸ் பாண்டியன் மீது அவர்கள் கொலை வழக்கு ஒன்றைத் தொடுக்கிறார்கள். அந்த வழக்கு சுமூகமாக நடப்பதற்கு அவர்களுக்குத் துணையாக மருது நிற்கிறான். இதனால் ரோலக்ஸ் பாண்டியனின் முதல் எதிரியாகிறான் மருது.

#TamilSchoolmychoice

வழக்கு நடந்ததா? மருதுவுக்கும், ரோலக்ஸ் பாண்டியனுக்குமான பகையில் யார் வென்றது என்பது தான் படத்தின் சுவாரஸ்யம்.

ரசித்தவை

மருதுவாக விஷால் ஏகப் பொருத்தம். வாட்டசாட்டமான உடற்கட்டு, கருத்த நிறம், முகவெட்டு அனைத்தும் அந்தக் கதாப்பாத்திரத்தின் குணாதிசயத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. நடிப்பிலும் மிகவும் அலட்டிக் கொள்ளாமல் தேவையான நேரத்தில் கோபமும், சாந்தமுமாக முகபாவனைகளை மாற்றி ஈர்க்கிறார். அவருக்கு இணையாகப் படத்தில் காமெடியிலும், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளிலும் கலந்துக் கட்டி அடிப்பது சூரி தான்.

அதிலும் அந்த கிளைமாக்ஸ் காட்சியில் சூரி இவ்வளவு அற்புதமாக நடிப்பார் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அவ்வளவு சிறப்பு.

அடுத்ததாக படத்தில் நம்மை பெரிதும் ஈர்க்கும் மூன்று பெண்கள், ஒன்று மருதுவின் அப்பத்தாவாக நடித்திருப்பவர். வசன உச்சரிப்பிலும், நடிப்பிலும் மறைந்த பழம்பெரும் நடிகை மனோரமாவை நினைபடுத்துகிறார். ஒருகாலத்தில் இப்படிப்பட்ட அழுத்தமான கதாப்பாத்திரங்களை அவர் தான் செய்து வந்தார்.

அடுத்ததாக, ஸ்ரீதிவ்யாவின் அம்மாவாக நடித்திருப்பவர். 10 நிமிடக் காட்சிகளில் தான் வருகிறார். ஆனால் கிராமத்துப் பெண்களின் வீரத்தையும், துணிச்சலையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திவிடுகிறார்.அடுத்து ஸ்ரீதிவ்யா.. அழகாக அம்சமாக இருக்கிறார். மிக இயல்பாகவும் நடித்திருக்கிறார்.

0படத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் வீரத்தை முன்னிறுத்தி போற்றியிருப்பது மிகவும் ரசிக்க வைத்தது.

ரோலக்ஸ் பாண்டியனாக ‘தாரை தப்பட்டை’ சுரேஸ்.. அவர் திரையில் வரும் காட்சிகள் அனைத்தும் மிரட்டல். வன்மம், குரோதம், பழிவாங்கல் என அனைத்தையும் கண்களில் வெளிப்படுத்துகிறார். அவரோடு, பயில்வான் கதாப்பாத்திரத்தில் ராதாரவி, அருள்தாஸ், நமோ நாராயணன் ஆகியோரும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

வேல்முருகன் ஒளிப்பதிவில் மதுரை வீதிகள், பழமையான வீடுகள், வயல்வெளிகள் என அனைத்தும் கதை நடக்கும் சூழலுக்கு ஏற்ப மிகச் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

டி.இமானின் பின்னணி இசையும், பாடல்களும் சிறப்பு. குறிப்பாக ‘சூராவளிடா’ பாடலில் சொல்லப்பட்டிருக்கும் உழைப்பாளர்களைப் போற்றும் வரிகள் சிறப்பு, ‘ஒத்தசட ரோசா’, ‘கருவக்காட்டு கருவாயா’ பாடல்கள் கேட்பதற்கு கிராமத்துப் பின்னணியில் இனிமை, ‘அக்கா பெத்த ஜிக்கா வண்டி’ ஆட்டம் போட வைக்கிறது.

வசனங்கள் பெரிதும் ஈர்க்கின்றன.

இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டியிருக்க வேண்டியவை

திரைக்கதையைப் பொறுத்தவரையில், ஒரு கொலையுடன் பரபரப்பாக தொடங்குகிறது. ஆனால் அதன் பிறகு மருது யார்? அவன் குணம் என்ன? என்பதை ரசிகர்களுக்குப் புரிய வைக்க பல சம்பவங்கள் இயல்பாக இல்லாமல் திணிக்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது.

உதாரணமாக, “மருதுக்கு ஆம்பள தொணசாமி.. பொம்பள மொதசாமி” என்று அறிமுகக் காட்சியில் சூரி பேசும் மிக நீண்ட  வசனம் போதாதா? ஆனால் அதன் பிறகும், “அப்பாத்தாளுக்காக இலை என்ன தலையையே எடுப்பேன்”, “பொம்பளங்களை மதிக்கிறவன் மருது”, “பொம்பளைக்கு ஒன்னுன்னா புலி மாதிரி அடிப்பேன்.. புடிச்சவளுக்கு ஒன்னுன்னா அந்தப்  புலியையே அடிப்பேன்” இப்படியாக மருதுவின் குணாதிசியத்தைச் சொல்ல பல காட்சிகளை திணித்து திரைக்கதையின் வேகத்தில் ஆங்காங்கே தொய்வை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

1462951917_vishal-marudhu-movieமுத்தையாவின் இதற்கு முந்தைய படமான ‘கொம்பனை’ எடுத்துக் கொண்டால், அதில் கொம்பன் யார் என்பதை பெரும்பாலும் காட்சிகள் தான் சொல்லும். அதில் சுவாரஸ்யம் அதிகமாக இருந்தது.

அதேநேரத்தில், கொம்பன் முரட்டுத்தனமானவனாக இருந்தால் கூட, எதிரிகளை வீழ்த்துவதில் அவன் போடும் திட்டம் மிக சுவாரஸ்யம். ஆனால் மருதுவில் எதிரிகளை வீழ்த்த அப்படிப்பட்ட விவேகமான காட்சிகள் இல்லாதது மிகவும் ஏமாற்றம்.

விஷாலுக்கும், ஸ்ரீதிவ்யாவிற்குமான காதல் காட்சிகளிலும் அவ்வளவு ஈர்ப்பு இல்லை. இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம்.

என்றாலும், எருது போல் சண்டையிலும், நடிப்பிலும் வேகம் காட்டும் விஷாலுக்காக படம் பார்க்கலாம்.

குறிப்பு: இரத்தம், கழுத்தறுப்பு, கொலை ஆகியவை சற்று வெளிப்படையாகவே காட்டப்பட்டிருப்பதால் குழந்தைகளுடன் செல்வதைத் தவிர்க்கலாம்.

– ஃபீனிக்ஸ்தாசன்