Home Featured தமிழ் நாடு மாநிலங்களவைக்கான தேர்தலில் திமுகவில் வேட்பாளர்கள் டிகேஎஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி!

மாநிலங்களவைக்கான தேர்தலில் திமுகவில் வேட்பாளர்கள் டிகேஎஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி!

959
0
SHARE
Ad

சென்னை – தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநிலங்களவை அதிமுக உறுப்பினர்கள் மனோஜ் பாண்டியன், நவநீதகிருஷ்ணன், ரபி பெர்னாட், திமுக உறுப்பினர்கள் கே.பி.ராமலிங்கம், தங்கவேலு, காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் எதிர்வரும் ஜூன் 11ஆம் தேதியோடு முடிவடைய உள்ள நிலையில், இதற்கான தேர்தலை தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜூன் 11ஆம் தேதி இந்தத் தேர்தல்கள் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தாலும், இந்த மாநிலங்களவைகளுக்கானத் தேர்தல் அரவக் குறிச்சி, தஞ்சாவூர் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்பாக நடைபெறுமா அல்லது அதற்குப் பின்னர் நடைபெறுமா என்ற சட்ட சிக்கல் நீதிமன்ற வழக்குகளால் நீடிக்கின்றது.

தமிழகத்திலிருந்து மொத்தம் 18 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட முடியும். இவர்கள் கட்டம் கட்டமாக பதவிக் காலம் முடிய, முடிய தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர் 6 ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார்.

#TamilSchoolmychoice

திமுக சார்பான வேட்பாளர்கள் பாரதி -இளங்கோவன்

இந்நிலையில், 98 தொகுதிகளை வென்றிருக்கும் திமுக கூட்டணி சார்பாக இரண்டு வேட்பாளர்கள் வெல்ல முடியும். ஒரு மாநிலங்களவை வேட்பாளர் வெல்வதற்கு குறைந்த பட்சம் 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அதாவது மொத்தமுள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து 6 பேரைத் தேர்ந்தெடுக்கும்போது ஒரு வேட்பாளருக்கு வெற்றி பெற குறைந்த பட்சம் 34 வாக்குகள் தேவைப்படும்.

DMK-RS.Barathi-TKS Elangovanஆர்.எஸ்.பாரதி-டிகேஎஸ் இளங்கோவன்…

திமுக சார்பான இரண்டு இடங்களுக்கு வேட்பாளர்களாக அக் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும், செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான அறிவிப்பை திமுக தலைவர் கருணாநிதி நேற்று சனிக்கிழமை வெளியிட்டதைத் தொடர்ந்து, பாரதி, இளங்கோவன் இருவரும் கோபாலபுரம் சென்று கருணாநிதியைச் சந்தித்து ஆசி பெற்றதோடு, நன்றியும் தெரிவித்துக் கொண்டனர்.

இதற்கிடையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அதிமுக சார்பில் 3 பேர் எளிதாக வெல்ல முடியும். இருப்பினும் நான்காவதாக வெற்றிபெறப் போவது யார் என்பதில் இரு கட்சிகளுக்கும் இடையில் இழுபறி நீடிக்கலாம்.

இதன் காரணமாகத்தான், தஞ்சை, அரவக் குறிச்சி தேர்தல்களுக்குப் பின்னரே மாநிலங்களவைக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என திமுக வழக்கு தொடுத்துள்ளது.

நேற்று நடைபெற்ற அந்த வழக்கில் மே 27க்கு முன்பாக இந்த இரண்டு தேர்தல்களையும் நடத்துவதற்கான சாத்தியங்களை தெரிவிக்கும்படி  சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

5 மாநிலங்களவை உறுப்பினர்களை அதிமுகவும், திமுகவும் பிரித்துக் கொள்ளும் நிலையில் 6வது வேட்பாளர் எந்தக் கட்சிக்கு கிடைப்பார் என்பதை, தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல் முடிவுகள் நிர்ணயிக்கும்.

இதன் காரணமாகத்தான், இந்த இரண்டு தேர்தல்களும் தற்போது மிகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளைத் தோற்றுவித்து பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளன.