கோலாலம்பூர் – இந்த வாரத்தில் மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில் இதுவரை 14 பேரை மலேசியக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இஸ்லாமிய பயங்கரவாதம் நாட்டில் வேர்விட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் மலேசியக் காவல் துறை நடத்திவரும் அதிரடி வேட்டைகளின் காரணமாக இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
கைது செய்யப்பட்டவர்களில் 8 பேர் சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்திற்கும், தென் பிலிப்பைன்சிலுள்ள அபு சாயாப் பயங்கரவாத இயக்கத்திற்கும் பணம் அனுப்பிய காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் ஐஎஸ் தீவிரவாத செயல்களுக்கு ஆள்சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தார் என காவல் துறை அடையாளம் காட்டியுள்ள முகமட் வாண்டி முகமட் ஜெடி என்பவருடன் கைது செய்யப்பட்டவர்களில் எண்மர் தொடர்பு கொண்டிருந்தது தெரிய வந்ததாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
மேலும் கைது செய்யப்பட்டவர்களில் சிலர் ஐஎஸ் சித்தாந்தங்களைப் பரப்ப முற்பட்டனர் என்றும், இரண்டு ஆண்களும் ஒரு பெண்மணியும் ஐஎஸ் போராட்டத்தில் இணைந்து கொள்ள சிரியா செல்லவிருந்தனர் என்றும் இந்தக் கைது நடவடிக்கை தொடர்பில் காவல் துறை தெரிவித்துள்ளது.
மே 17 முதல் 20ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. மலேசியக் காவல் துறையின் சிறப்புப் போலீஸ் பிரிவினரின் (ஸ்பெஷல் பிராஞ்ச்) பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினரின் கண்காணிப்பு நடவடிக்கைகளின் மூலம் இந்த கைதுகள் சாத்தியமாகியிருக்கின்றன.