கோலாலம்பூர் – ரயானி ஏர் நிறுவனம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட்டு தயாராக இருப்பதாகவும், எந்த நேரமும் அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் தெரிவித்துள்ளார்.
ஷரியா கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்கும் அந்த விமான நிறுவனத்தின் நிர்வாகிகளிடம் அண்மையில் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் லியாவ் குறிப்பிட்டுள்ளார்.
“அவர்கள் கொடுக்கப்பட்ட பதில்களைக் கேட்டார்கள். அதன் அடிப்படையில் இறுதி அறிக்கை என்னிடம் கொடுக்கப்பட்டுள்ளது”
“ரயானி ஏர் குறித்த இறுதி முடிவு விரைவில். இறுதி அறிக்கையை வெளியிடும் தேதியை முடிவு செய்யக் காத்திருக்கிறேன்” என்று இன்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் லியாவ் தெரிவித்துள்ளார்.
விமானிகளின் போராட்டம் காரணமாக எழுந்த புகார்களை அடுத்து கடந்த ஏப்ரல் 11-ம் தேதி, ரயானி ஏர் நிறுவனத்திற்கு மூன்று மாதம் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
உள்நாட்டு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் 1966-ஐ மீறியதாக ரயானி ஏர் இயக்கத்திற்கு எதிராக இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.