சென்னை – 5 ஆண்டுகளுக்கு பிறகு, சட்டசபைக்குள் வந்த திமுக தலைவர் கருணாநிதி, சட்டசபை உறுப்பினராகவும் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
அவருக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவி பிரமாணம் செய்து வைத்தார். சட்டசபையில் சாய்தள வசதியோடு, இருக்கை வசதி செய்து தரப்படவில்லை என்பதால் கடந்த ஆட்சியில் 5 ஆண்டுகளாக, கருணாநிதி சட்டசபைக்குள் செல்லாமல் கையெழுத்து போட்டு விட்டு திரும்பி விடுவார்.
இந்நிலையில் 15-ஆவது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. இப்போது கருணாநிதிக்கு வசதியாக, சாய்தள வசதியை அரசு செய்து கொடுத்துள்ளது. இதையடுத்து அவைக்குள் வந்த கருணாநிதி, எம்.எல்.ஏவாக பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
செம்மலை அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 5 வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக அவைக்குள் கருணாநிதி வருகை தந்தது, திமுகவினரை உற்சாகப்படுத்தியது.
89 உறுப்பினர்களோடு திமுக வலுவான எதிர்க்கட்சியாக உள்ளதாலும், சாய்தள வசதி செய்யப்பட்டுள்ளதாலும், கருணாநிதி இனிமேல் சட்டசபைக்கு அவ்வப்போது வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே உறுதிமொழி எடுத்த பிறகு சபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, சட்டசபைக்கு வருவது கடமை என்பதால் வந்தேன். தேர்தல் ஆணையம் என்பது தேர்தலுக்கு எதிரான ஆணையமாக உள்ளது என கருணாநிதி தெரிவித்தார்.