கோலாலம்பூர் – உலகமே பெரிதும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கபாலி’ திரைப்படத்தில், ரஜினிக்கு மலாய் மொழியில் பின்னணி பேசப் போகும் மலேசியக் கலைஞர் யார்? என்று கேள்வியோடு செல்லியல் ஏற்கனவே கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.
தற்போது அந்த மலேசியக் கலைஞர் யார்? என்ற விவரம் வெளியே கசிந்துள்ளது. அவர் வேறுயாருமல்ல மலேசியத் தொலைக்காட்சி தொகுப்பாளரும், மிமிக்ரி கலைஞருமான அருண் குமரன் (படம்) தான்.
இத்தகவலை, முன்னணி நடிகரும், பிஜிடபிள்யூ ஸ்டூடியோஸ் நிறுவனருமான பால கணபதி வில்லியம் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனிடையே, ரஜினிக்கு மலாய் மொழியில் பின்னணி பேச, கலைஞர்கள் தேர்வு சுமார் 15 நாட்கள் நடந்துள்ளது.
200-க்கும் மேற்பட்ட கலைஞர்களிடம் நடத்தப்பட்ட தேர்வில், இறுதியாக, ரஜினி போன்றே சிறப்பாக மிமிக்கிரி செய்யத் தெரிந்தவரும், தனது சிறு வயது முதலே ரஜினிகாந்த் மீது அதீத அன்பு கொண்டிருந்த மலேசிய இந்தியருமான அருண் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
இத்தகவலை இந்தியாகிளிட்ஸ் இணையதளமும் பகிர்ந்துள்ளது.
எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலுக்காக கபாலி திரைப்படத்தை மலேசியாவில் வெளியிடவிருக்கும் மாலிக் ஸ்ட்ரீம் கொர்ப்பரேஷன் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகின்றோம்.
படம்: அருண் பேஸ்புக்