புதுடெல்லி – மோடி அரசின் 2-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள அமிதாப் பச்சன் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை நடத்துவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டெல்லி இந்தியா கேட்டில் மோடி அரசின் 2-ஆம் ஆண்டு நிறைவு விழா வரும் 28-ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி, அவரது அரசின் சாதனைகளை விளக்கி, நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, டெல்லி இந்தியா கேட்டில் நாளை மறுநாள் 28-ஆம் தேதி மத்திய அரசு சார்பில் பிரமாண்ட விழா நடக்கிறது. இதற்கு ‘ஸ்மைல் பிளீஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
ஆனால், இந்த விழாவில் அமிதாப் பச்சன் கலந்துக்கொள்வது பற்றி காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து அக்கட்சியினர்கள் கூறுகையில் “ஒருவர் மீது கருப்பு பணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த குறிப்பிட்ட நபர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துக் கொள்கிறார் என்றால் இது குறித்து விசாரணை நடத்தும் அமைப்புகள் என்ன நினைக்கும்? இதை புறந்தள்ள முடியாது.
அமிதாப் பச்சன் மீது பனாமா பேப்பர்ஸ் வெளியிட்ட குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடந்துவரும்போது அவர் மோடியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்பது, விசாரணை நடத்தும் அமைப்புகளுக்கு பல கேள்விகளை எழுப்பும்.
ஆனால் அமிதாப், தன் மீதான குற்றசாட்டுகளில் இருந்து வெற்றிகரமாக வெளியே வருவார் என்று நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்கள். காங்கிரசின் குற்றச்சாட்டை அமிதாப்பின் மகன் அபிஷேக் மறுத்துள்ளார்.
அமிதாப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை, பெண் குழந்தைகளின் கல்வி குறித்து மட்டுமே பேசவுள்ளார் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.