கோலாலம்பூர் – சூப்பர் ஸ்டார் நடிப்பில், பா.இரஞ்சித் இயக்கத்தில், மலேசியாவைக் கதைக் கருவாகக் கொண்ட ‘கபாலி’ திரைப்படத்தின் மலாய் டீசரில், ரஜினிக்குப் பின்னணி பேசியிருக்கும் மலேசியக் கலைஞர், மலேசியாவின் முன்னணித் தொலைக்காட்சி நிறுவனமான அஸ்ட்ரோவின் நிகழ்ச்சித் தொகுப்பாளரும், மிமிக்கிரி கலைஞருமான அருண் குமரன் தான் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
இது குறித்து அருண் குமரனை செல்பேசி மூலமாகத் தொடர்பு கொண்டு அவரது அனுபவத்தைக் கேட்டோம்.
அவர் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள் இதோ:-
“குரல் தேர்வு குறித்து மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்பரேசன் நிறுவனம் விளம்பரம் கொடுத்திருந்தார்கள். அதைப் பார்த்துத் தெரிந்து கொண்ட நான் குரல் தேர்விற்கு எனது குரலைப் பதிவு செய்து அனுப்பி வைத்தேன்.”
“என்னைப் போல் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் இதில் பங்குபெற்றுள்ளார்கள் என்ற விபரம் எனக்குப் பின்னர் தான் தெரிந்தது.”
“அதன் பின்னர், நான் தேர்வு செய்யப்பட்டதாகத் தகவல் வந்தது.” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், குரல் பதிவு தலைநகரிலுள்ள புகழ்பெற்ற ஸ்டூடியோ ஒன்றில் நடைபெற்றதாகவும், மிகக் கடினமான முயற்சிகளுக்குப் பின் அப்பணியைத் தான் அவர்களின் எதிர்பார்ப்புகளின் படி சிறப்பாகச் செய்து கொடுத்ததாகவும் அருண் குறிப்பிட்டார்.
அவர் அங்கு சென்ற பின்னர் தான் பேச வேண்டிய வசனங்கள் கையில் கொடுக்கப்பட்டுள்ளன. ரஜினியின் வாயசைவிற்கு ஏற்ப பேச வேண்டும். அதேநேரத்தில், தனது சொந்தக் குரலை மாற்றி ரஜினியின் நிஜமான குரலுக்கு ஏற்ப அதே அளவு (ambience) மாறாமல் பேச வேண்டும். இவ்வளவு கடினங்களுக்கிடையே அந்த டீசருக்கான பின்னணி பேசிக் கொடுத்திருக்கிறார் அருண் குமரன். அதுவும் ஒரே நாளில்..
மேடைகளில் ரஜினி ஏற்கனவே பேசிப் பிரபலமான பல வசனங்களைப் பேசி மிமிக்ரி செய்து விடலாம். ஆனால் புதிய வசனங்களை, அதுவும் எந்த ஒரு முன் பயிற்சியும் இல்லாமல் செய்து முடித்துக் கொடுப்பது எவ்வளவு கடினம் என்பது அந்தத் துறையில் உள்ளவர்களுக்குத் தான் தெரியும்.
இந்நிலையில், முழு படத்திற்கான பின்னணி குரலைப் பேசுவதற்கு அவர், விரைவில் இந்தியா செல்லவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஜினிக்கு வேறு மொழிகளில் பின்னணி பேசியவர்கள்
சூப்பர் ஸ்டாருக்குப் பின்னணி பேசும் வாய்ப்பு என்பது நிச்சயமாக மிகவும் அதிருஷ்டவசமான ஒன்று தான். மலேசியாவில் முதன்முறையாக ‘கபாலி’ திரைப்படத்தை மலாய் மொழியில் பார்த்து ரசிக்கவுள்ள மற்ற இனங்களைச் சேர்ந்த ரசிகர்களுக்கு, ரஜினிக்கு வரவிருக்கும் பின்னணி குரல் தான் அந்தக் கதாப்பாத்திரத்தின் கம்பீரத்தைக் காட்டப் போகின்றது.
இந்நிலையில், இதற்கு முன்பு, ரஜினி நடித்த தமிழ்ப் படங்கள் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்ட போது, அதில் ரஜினிக்கு மயூர் வியாஸ் என்ற கலைஞர் தான் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.
அதே போல், தெலுங்கில் ரஜினியின் பெரும்பான்மையான திரைப்படங்களில் அவருக்கு பின்னணி குரல் கொடுத்தவர் வேறு யாரும் அல்ல பாடகர் மனோ தான். ரஜினியின் குரலுடன் ஒத்துப் போகும் வகையில் அவரது பின்னணி குரல் அமைந்ததால், அவருக்கே தொடர்ந்து வாய்ப்புகளை அளித்தனர் தயாரிப்பாளர்கள்.
ரஜினியின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ‘தளபதி’ மலையாளத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்ட போது அவருக்குப் பின்னணி குரல் கொடுத்தவர் ஜிஸ்மோன் என்ற கலைஞர். அவர் ‘பைசைக்கிள் தீவ்ஸ் (Bicycle Thieves) என்ற படத்தை இயக்கியதன் மூலம் தற்போது அவர் மலையாள திரையுலகில் இயக்குநராக வலம் வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
– ஃபீனிக்ஸ்தாசன்