கோலாலம்பூர் – நஜிப்புக்கு எதிராக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தாக்கல் செய்திருந்த வழக்கில், தனது தரப்பு தற்காப்பு வாதங்களைச் சமர்ப்பிக்க இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கேட்டு, பிரதமர் நஜிப் தாக்கல் செய்திருந்த மனுவை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
வரும் ஜூன் 9-ம் தேதிக்குள் நஜிப் தரப்பு நியாயங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி அபு பக்கர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கை இதற்கு முன்பு விசாரணை செய்த நீதிபதி ரோஸ்னைனி சாயுப் ஷா ஆலம் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதால், தற்போது புதிய நீதிபதியாக அபு பக்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இம்முடிவை அறிவிப்பதற்கு முன்பு இரண்டு தரப்பு மனுவையும் விசாரணை செய்தார். நஜிப் தரப்பில் அவரது தலைமை வழக்கறிஞர் செசில் ஆப்ரஹாம், வழக்கறிஞர்கள் ரிஸ்வந்த் சிங், மொகமட் ஹபாரிசாம் ஹாருன் ஆகியோர் பிரதிநிதித்தனர்.
மகாதீர் தரப்பிலான சட்டக்குழுவிற்கு மொகமட் ஹானிப் காத்ரி அப்துல்லா தலைமை வகித்தார்.
அரசாங்கப் பதவி வகித்த காலத்தில் முறையற்ற வகையில் நடந்து கொண்டதோடு, அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்று கூறி பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குக்கு எதிராக மகாதீர், முன்னாள் லங்காவி அம்னோ மகளிர் பிரிவு உறுப்பினர் அனினா சாடுடின் மற்றும் முன்னாள் பத்து கவான் தொகுதி அம்னோ உதவித்தலைவர் கைருடின் அபு ஹசான் ஆகிய மூவரும் கடந்த மார்ச் மாதம் வழக்குப் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.