வாஷிங்டன் – அமெரிக்காவில் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக, குடியரசு கட்சி சார்பில் வாஷிங்டன் மாகாணத்தில் நடைபெற்ற உட்கட்சித் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
இதன்மூலம், வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை எதிர்த்து, குடியரசு கட்சியின் சார்பில் டிரம்ப் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
வாஷிங்டனில் நடந்த உட்கட்சித் தேர்தலில் டிரம்புக்கு 76.2 சதவீத வாக்குகள் கிடைத்தன. இதன்மூலம் டிரம்பின் ஆதரவு பிரதிநிதிகள் எண்ணிக்கை 1,229 ஆக அதிகரித்துள்ளது.
இவரது கட்சியில் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கு 1,237 பிரதிநிதிகள் ஆதரவு தேவை. அதாவது ட்ரம்புக்கு இன்னும் 8 பிரிதிநிதிகள் ஆதரவு மட்டுமே தேவை.
அடுத்தபடியாக, கலிபோர்னியா, நியூஜெர்சி, நியூமெக்சிகோ, மொன்டானா மற்றும் தெற்கு டகோடா ஆகிய மாகாணங்களில் வரும் ஜூன் 7-ஆம் தேதி உட்கட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
வாஷிங்டனில் வெற்றி பெற்றதையடுத்து, நியூமெக்சிகோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டிரம்ப் பேசினார். அப்போது டிரம்புக்கு எதிரானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் இவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, போராட்டக்காரர்கள் போலீஸார் மீது, கற்கள், எரிந்த துணிகளை வீசி தாக்குதல் நடத்தினர்.