Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்!

திரைவிமர்சனம்: இது நம்ம ஆளு – சலிப்பைத் தரும் செல்போன் காதல்!

1250
0
SHARE
Ad

Idhu-Namma-Aalu-Tamil-Movie-Kaathaga-Imageகோலாலம்பூர் – படம் இப்ப வருது.. அப்ப வருதுன்னு மூன்று ஆண்டுகளாக இழுத்தடித்து ஒருவழியாக இன்று வெளியாகியிருக்கிறது பாண்டிராஜ் இயக்கத்தில், சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா நடிப்பில் ‘இது நம்ம ஆளு’.

இவ்வளவு இழுவைக்குப் பிறகும் ரசிகர்கள் இந்தப் படத்தின் மீதான ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளாமல் இருந்ததற்கான காரணம் சிம்பு, நயன்தாரா மீண்டும் இணைந்து நடிக்கும் படம் என்பதால் தான்.

அதோடு, படத்தில் சிம்பு, நயன்தாரா நடித்தது போலவே இருக்காது. நிஜக் காதலர்களாக இருந்த போது அவர்களுக்குள் இருந்த நெருக்கம்,  காதலில் ஏற்பட்ட பிரச்சனைகள் போன்றவை படத்தில் அப்படியே பிரதிபலிக்கும் இப்படியெல்லாம் அவ்வப்போது பேட்டிகளின் மூலமாக ரசிகர்களின் சூடு குறையாமல் பார்த்துக் கொண்டனர் படக்குழுவினர்.

#TamilSchoolmychoice

சரி.. அப்படி என்னதான் இருக்கு படத்தில்?

ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் சிம்புவுக்கு அவரது அப்பா ஜெயப்பிரகாஷ் பெண் பார்க்கிறார். அந்தப் பொண்ணு தான் நயன்தாரா. சிம்புவுக்கு நயன்தாராவைப் பார்த்தவுடன் பிடித்துவிடுகிறது. (இருக்காதா பின்னே?).

நயன்தாராவும், சிம்புவும் முதல் தடவை சந்தித்துப் பேசும் போதே, சிம்புவின் லீலைகளைப் புட்டுப் புட்டு வைக்கிறார் நயன்தாரா. அங்கு தான் கதையில் ஆண்ட்ரியா வருகிறார்.

ஆண்ட்ரியாவுடனான காதல் பற்றி சிம்பு ஒரு பிளாஷ்பேக் சொல்கிறார். அந்தக் காதல் ஒரு உப்பு சப்பில்லாத பிரச்சனையால் முடிவுக்கு வருகிறது.

இவ்வளவும் தெரிந்து கொண்ட பின்னர், சிம்பு-நயன்தாரா இடையே ஏற்படும் காதல், கல்யாணத்தில் முடிகிறதா? கட் ஆகிறதா? என்பது தான் மீதிக் கதை.

நடிப்பு

Idhu-Namma-Aalu-bloopers-on-Valentine’s-Dayசிம்பு .. மூன்று ஆண்டுகளாக படம் இழுத்துக் கொண்டே சென்றதாலோ என்னவோ.. ஒல்லியாக, சற்று உப்பலாக, ஒரு பாடல் காட்சியில் மிகவும் எடை கூடி என மூன்று விதமாகத் தெரிகிறார்.

ஒரு காலத்தில் விரலை ஆட்டி, தலையை சிலிப்பி ஹீரோயிசம் காட்டிக் கொண்டிருந்த சிம்புவா இது? என்று எண்ணும் அளவிற்கு இந்தப் படத்தில் அதற்கு நேர்மாறாக அடங்கி ஒடுங்கி நடித்திருக்கிறார்.

ஒரு காட்சியில் கூட சிம்பு முஷ்டி முறுக்கவோ, முகத்தில் கோபத்தை வெளிப்படுத்தவோ, 10 பேரைப் பந்தாடவோ அவசியம் இருக்காத அளவிற்கு அவரது கதாப்பாத்திரம் அமைந்திருக்கிறது.

மயிலா கதாப்பாத்திரத்தில் நயன்தாரா..  அழகாக இருக்கிறார். சிம்புவை அலையவிட்டு பல சோதனைகள் செய்த பிறகே காதலிக்கத் தொடங்குகிறார். முதலில் திமிர் பிடித்த பெண் போல் தெரியும் அவரது கதாப்பாத்திரம், பின்னர் “குட்டிம்மா” என்றழைக்கும் படி அன்னியோன்யமாக மாறுவது பெண்களின் மனோபாவத்தைப் பிரதிபலிக்கிறது.

கொஞ்ச நேரம் வந்தாலும் ஆண்ட்ரியா ரசிக்க வைத்துவிட்டு, அப்படியே கதையோட்டத்தில் காணாமல் போய்விடுகிறார்.

சிம்புவோடு, கடைசி வரை வந்து காமெடியில் கலக்கியிருப்பது சூரி தான். இந்தப் படத்தில் சிம்புவின் ஆஸ்தான காமெடியன் சந்தானம் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை. ஒரு 5 நிமிடக் காட்சிக்காக சந்தானம் வருகிறார். அவ்வளவு தான். மற்றபடி சூரி தான் எல்லாம்.

இவர்களோடு, ஜெயப்பிரகாஷ், உதய் மகேஷ், தீபா, மதுசூதனன் ஆகியோரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்.

திரைக்கதை

Idhu-Namma-Aalu-Movie-Photosஒரு முழு நீளப் படமாக எடுக்கும் அளவிற்கு இந்தப் படத்தில் கதை இருக்கா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே குறுகிய காலத்தில் நடக்கும் உரையாடல்கள், பிரச்சனைகள், கொஞ்சல்கள், எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்கள் ஆகியவற்றை வைத்து திரைக்கதை அமைத்து ஒரு முழுப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

மம்முட்டி, பானுப்பிரியா நடித்த ‘அழகன்’ என்றொரு படம். அதில் ஒரு பாடல் காட்சியில் இரவு பேசத் தொடங்கும் இருவரும், விடிய விடிய பேசிக் கொண்டே இருப்பார்கள். அது ஒரு பாடல் காட்சி மட்டுமே. ஆனால் அந்தப் பாடல் காட்சியே ஒரு மணி நேரம் நீடித்தால் எப்படி இருக்கும்? அப்படி தான் இருக்கிறது இந்தப் படத்திலும்.

சிம்பு, நயன்தாரா இடையேயான காதல் வெறும் போன் உரையாடல்களிலேயே செல்வது நடைமுறை வாழ்க்கையோடு ஒத்துப் போனாலும் கூட, படம் பார்க்கும் நமக்கு அலுப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. அந்தக் காட்சிகளின் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.

நல்ல வேளையாக, அந்தக் காட்சிகளில் இடையே சூரியை திணித்து, “இந்த பாரு.. எக்ஸ் லவ்வரு பேராச் சொல்றாங்க”, “நடிங்கடா.. நடிங்கடா.. எமன் கையில லெமன் கெடச்ச மாதிரி.. ஜூஸ் புளியாம விடமாட்டாங்க” இப்படியாகக் காமெடி வசனங்களை பேச வைத்திருப்பதால், தொடர்ந்து நம்மால் படம் பார்க்க முடிகின்றது.

படத்தின் தொடக்கத்தில் வரும் ஐடி நிறுவனங்களின் அறிமுகம் ரசிக்க வைத்தது. ஆனால் அவ்வளவு நீண்ட அறிமுகத்திற்கும், படத்தின் கதைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. சிம்பு ஒரு ஐடி நிறுவனத்தில் டீம் மேனேஜர் என்பதைத் தவிர.

இப்படியாக கதைக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு தொடக்கம், காரணமே இல்லாமல் பிரியும் ஒரு காதல், அழுத்தமே இல்லாத காட்சிகள் என திரைக்கதை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி நகர்வதை ரசிக்க முடியவில்லை.

ஒளிப்பதிவு, இசை, வசனம்

Idhu-Namma-Aalu-Tamil-2016-500x500பால சுப்ரமணியன் ஒளிப்பதிவில் சென்னையில் வளர்ச்சியடைந்த பகுதிகள் அனைத்தும் மிகச் சிறப்பாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளன. டாப் ஆங்கிலில் காட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகள், இரயில், சாலைகள் ஆகியவை மிகவும் ரசிக்க வைக்கின்றன.

குரளரசன் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை.. “காத்தாக வந்த பெண்ணே”, “என் இராகம் ஒரு தலராகம்” போன்றவை மனதில் பதியும் அளவிற்கு புதுமை.

படத்தில் காதல் காட்சிகளில் வரும் வசனங்கள் எவ்வளவு அலுப்பைத் தருகிறதோ, அதற்கு நேர்மாறாக சிம்பு – சூரி பேசிக் கொள்ளும் காமெடி வசனங்கள் ரசிக்க வைக்கின்றன.

உதாரணமாக, சிம்பு “நான் அவளை லவ் பண்றேன் டா” என்பார்.. உடனே சூரி.. “எவ்வளவு நாளைக்கு சகோ?” என்று பதிலுக்கு கேள்வி கேட்பார். இப்படியாக படத்தில் ரசிப்பதற்கான இடமும் உள்ளது.

ஆக, படத்தில் வரும் இயல்பான, எதார்த்தமான கதையோட்டம் தான் பலமாகவும், பலவீனமாகவும் தெரிகின்றது.

மொத்தத்தில், இப்படம் நவீன சூழலுக்கு ஏற்ப இளைஞர்களையும், காதலில் இருப்பவர்களையும் கவரும். ஆனால் எல்லா தரப்பினரையும்? என்பது கேள்விக் குறி தான்.

– ஃபீனிக்ஸ்தாசன்