சென்னை – சென்னையில் ரூ.1,366.24 கோடி செலவில் பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டம் தொடங்கப்படவுள்ளது. இதற்கு முதல் கட்டமாக தமிழக அரசு சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளது.
இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்துக்கு மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தைச் செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலம் தமிழக அரசு சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளது.
இந்த நிறுவனம் ரூ.1,366.24 கோடியில் சென்னையை ஸ்மார்ட் சிட்டி உருவாக்குதற்கான பணிகளை மேற்கொள்ளும். இந்த நிறுவனம் ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் செயல்படும். நிறுவனங்களின் சட்டம் 2013-இன் படி வரையறுக்கப்பட்ட நிறுவனமாக இது செயல்படும்.
இதில் தமிழக அரசு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியும் இணைந்து 50 : 50 என்ற அளவில் பங்கு வகிக்கும். இந்த நிறுவனத்தின் தலைவராக பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையாளர் செயல்படுவார்.
மேலும், சென்னை மாநகரின் காவல்துறை கூடுதல் ஆணையாளர் உள்ளிட்ட 13 பேர் இயக்குநராக பணியாற்றுவார்கள். சென்னையை பொலிவுறு நகராக தரம் உயர்த்துவதன் ஒரு பகுதியாக முதல் கட்டமாக தியாகராய நகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.