சுபாங் ஜெயா – பாஸ் கட்சி கொண்டு வந்திருக்கும் ஹூடுட் சட்டதிருத்த மசோதா – ஜூன் 18இல் நடைபெறவிருக்கும் இரண்டு நாடாளுமன்ற இடைத் தேர்தல்கள் -மஇகா தேர்தல்கள் ஒத்திவைப்பு – இவற்றுக்கு மத்தியில் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் இன்று மஇகாவின் சிறப்பு தேசியப் பொதுப் பேரவை சுபாங் ஜெயாவில் நடைபெறுகின்றது.
இந்த சிறப்பு பொதுப் பேரவையில், மஇகா பேராளர்கள் கலந்து கொண்டு பல்வேறு அம்சங்கள் தொடர்பான விவாதங்களில் ஈடுபடவுள்ளனர்.
இன்றைய பொதுப் பேரவையில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் தீர்மானங்களில் பிரதமருக்கு மஇகாவின் பிளவுபடாத ஆதரவைத் தெரிவிப்பது, மஇகா தேசியத் தலைவருக்கு கட்சியின் ஆதரவு தெரிவிப்பது ஆகிய தீர்மானங்களும் அடங்கும்.
இவை தவிர, கல்வி, பொருளாதாரம், இந்தியர்களின் வேலைவாய்ப்பு ஆகிய தலைப்புகளிலான தீர்மானங்களும் இன்றைய சிறப்பு மாநாட்டில் முன்மொழியப்பட்டு விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எல்லா தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளும், எதிர்வரும் 14வது பொதுத் தேர்தலை முன்னிட்டு கட்சித் தேர்தல்களை ஒத்தி வைத்திருக்கும் நிலையில், மஇகா மத்திய செயலவையும் இந்த ஆண்டு நடைபெறவிருந்த கட்சித் தேர்தல்களை பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடத்த ஒத்தி வைத்துள்ளது.
மஇகா மத்திய செயலவையின் இந்த தேர்தல் ஒத்தி வைப்பு முடிவுக்கும் இன்றைய மாநாட்டில் கலந்து கொள்ளும் பேராளர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.