சுபாங் ஜெயா: இன்று இங்கு நடைபெற்ற மஇகா சிறப்பு பொதுப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களையும், கலந்து கொண்ட பேராளர்கள் ஏகமனதாக ஏற்றுக் கொண்டு, அங்கீகரித்தனர்.
இதன் மூலம், கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தின் தலைமைத்துவத்திற்கு மஇகா பேராளர்கள் தங்களின் வலுவான ஆதரவைப் புலப்படுத்தியுள்ளதோடு, கட்சி தற்போது ஒற்றுமையுடனும், ஒருமித்த மனப்பாங்குடனும் செயல்பட்டு வருவதையும் எடுத்துக் காட்டியுள்ளனர்.
ஏன் இந்த சிறப்பு மாநாடும் – தீர்மானங்களும்?
இன்று நடைபெற்ற சிறப்பு பேராளர் மாநாட்டில் டாக்டர் சுப்ரா- துணைத் தலைவர் எஸ்.கே.தேவமணி…
மாநாடு தொடங்குவதற்கு முன்னர் கட்சியின் தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரா இன்றைய சிறப்பு பேராளர் மாநாட்டிற்கான அவசியத்தையும், தீர்மானங்களின் நோக்கங்களையும் விளக்கினார். இன்றைய மாநாட்டில் 1,350க்கும் மேற்பட்ட பேராளர்கள் திரளாகக் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளதற்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற மஇகா ஆண்டுப் பொதுப் பேரவை ஒருநாள் மாநாடாக, கட்சித் தேர்தல்களோடு நடத்தப்பட்ட காரணத்தால், அப்போது தீர்மானங்களை விவாதிக்க நேரமும், வாய்ப்பும் கிடைக்கவில்லை என்று தெரிவித்த, சுப்ரா அதன் காரணமாகவே இன்றைய சிறப்பு மாநாடு நடைபெறுவதாக பேராளர்களுக்குத் தெரிவித்தார்.
அதன் பின்னர் ஒவ்வொரு தீர்மானமும் முன்மொழியப்பட்டபோது, அனைத்துப் பேராளர்களும் தங்களின் கரங்களை உயர்த்தி ஏகமனதாக ஆதரவு தெரிவித்தனர்.
மேடையில் அமர்ந்திருந்த தலைவர்களும், மத்திய செயற்குழு உறுப்பினர்களும் தங்களின் முழுமனதாக ஆதரவைத் தெரிவித்துக் கொண்டனர்.
மத்திய செயற்குழு முடிவுகளுக்கு ஆதரவு
மாநாட்டில் திரளாகக் கலந்து கொண்ட பேராளர்கள் தீர்மானங்களுக்கு கைதூக்கி ஆதரவளித்தபோது…
முதலில் அரசியல் ரீதியான, கட்சி ரீதியான முக்கிய தீர்மானங்களை சுப்ரா முன்மொழிந்து விளக்கம் தந்ததும் அந்தத் தீர்மானங்களை பேராளர்கள் ஏகமனதாக கைதூக்கி ஆதரவு தெரிவித்து ஏற்றுக் கொண்டனர்.
2009 மத்திய செயற்குழு எடுத்த அனைத்து முடிவுகளையும், நடவடிக்கைகளையும் அங்கீகரிக்கும் தீர்மானத்திற்கும் பேராளர்கள் இன்று ஏகனமனதாக ஆதரவு தெரிவித்தனர்.
அதே போன்று 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற கட்சியின் 2013ஆம் ஆண்டுக்கான மறு தேர்தல்களின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயற்குழு எடுத்துள்ள, இனி எடுக்கக் கூடிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் பேராளர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
கட்சித் தேர்தல்கள் ஒத்திவைப்பு
இந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த கட்சித் தேர்தல்களை 14வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடத்துவது என மத்திய செயலவை எடுத்த முடிவையும் பேராளர்கள் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.
இந்த மத்திய செயலவை முடிவு குறித்து விளக்கமளித்த சுப்ரா, அடுத்த ஆண்டு தொடங்கி எப்போது வேண்டுமானாலும் 14வது பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களிலும் இது போன்று கட்சித் தேர்தல்கள், பொதுத் தேர்தலை முன்னிட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுப்ரா சுட்டிக் காட்டியதோடு, மிகக் கடுமையான சவாலாகக் கருதப்படும், 14வது பொதுத் தேர்தலுக்காக கட்சியைத் தயார்ப்படுத்த இந்த தேர்தல் ஒத்திவைப்பு அவசியமானதாகும் என்றும் பேராளர்களிடம் வலியுறுத்தினார்.
இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பகுதிகளுக்கான பதவிகள்
காங்கிரசின் பல்வேறு நிலைகளில் இளைஞர் பகுதித் தலைவர் பதவியை வகிப்பதற்கான தகுதிகள் குறித்து மத்திய செயற்குழு மேற்கொண்ட முடிவுக்கும் இன்றைய பேராளர் மாநாடு தீர்மானம் வடிவில் ஆதரவு தெரிவித்தது.
காங்கிரசின் பல்வேறு நிலைகளில் இளைஞர், மகளிர், புத்ரா, மற்றும் புத்ரி பகுதித் தலைவர்கள் அந்தப் பதவியை வகிக்க, முழுமையான ஒரு தவணை தகுதி உடையவர்கள் அதிகமானோர் இல்லாததைக் கட்சி கவனத்தில் கொண்டு, இளைஞர், மகளிர், புத்ரா மற்றும் புத்ரி ஆகிய பிரிவுகளின் எல்லா நிலைகளுக்குமான தேர்தலில், போட்டி இல்லாத பட்சத்தில், ஒரு முழு தவணை இல்லாத இளைஞர், மகளிர், புத்ரா, மற்றும் புத்ரி பகுதி உறுப்பினர் அந்தப் பதவியை வகிக்கலாம் என மத்திய செயலவை முடிவு செய்திருந்தது.
அந்த முடிவை பேராளர்கள் தீர்மானம் ஒன்றின் வடிவில் ஆதரித்து அங்கீகரித்தனர்.
9 நியமன மத்திய செயலவை உறுப்பினர்கள்
9 நியமன மத்திய செயற்குழு உறுப்பினர்களை நியமிக்கும் தேசியத் தலைவரின் உரிமையானது முழுக்க, முழுக்க தேசியத் தலைவரின் விருப்பத்தைப் பொறுத்தது எனவும் மத்திய செயலவை மஇகா அமைப்பு விதி 46-ஐ மத்திய செயலவை அர்த்தப்படுத்தி எடுத்துள்ள முடிவையும் இன்றைய சிறப்பு பேராளர் மாநாடு அங்கீகரித்து உறுதிப்படுத்தியது.
இதன் மூலம் தேசியத் தலைவர் 9 நியமன உறுப்பினர்களை தனது பதவிக் காலத்தின் போது, எப்போது வேண்டுமானாலும், நியமிக்கலாம் என்பதோடு, எத்தனை பேரை வேண்டுமானாலும் நியமிக்கலாம் – ஆனால், 9 பேருக்கும் மிகாத எண்ணிக்கை கொண்டவர்களைத்தான் நியமிக்க முடியும் – எனப் பொருள் கொள்ளப்படும்.
சிறப்பு பேராளர் மாநாடு முறையாக நடத்தப்படுகின்றது என்பதை உறுதிப் படுத்தும் தீர்மானம்
இன்று நடத்தப்பட்ட சிறப்பு பேராளர் மாநாடு முறையாக முன்அறிவிப்பு கொடுத்து, சட்டபூர்வமாக நடத்தப்படுகின்றது என்பதை ஒப்புக் கொள்ளும் தீர்மானம் ஒன்றையும் பேராளர்கள் அங்கீகரித்தனர்.
மற்ற தீர்மானங்கள்
மேற்குறிப்பிட்ட தீர்மானங்கள் தவிர, பிரதமருக்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றையும், மஇகா தேசியத் தலைவருக்கு ஆதரவு தெரிவிக்கும் மற்றொரு தீர்மானத்திற்கும் இன்றைய பேராளர் மாநாடு ஆதரவு தெரிவித்தது.
மேலும், கல்வி, பொருளாதாரம், இந்தியர்களின் வேலைவாய்ப்பு, இந்தியர்களின் பங்குடமை ஆகிய அம்சங்கள் குறித்த, தீர்மானங்களும் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டன.
பல பேராளர்கள் இந்த தீர்மானங்கள் குறித்த விவாதங்களில் பங்கு பெற்று தங்களின் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
-செல்லியல் தொகுப்பு