சுபாங் ஜெயா – நேற்று காலை 11.30 மணியளவில் இங்குள்ள ஒன் சிட்டி வளாகத்தில் மஇகா சிறப்பு பொதுப் பேரவை நடந்து கொண்டிருந்தபோது முன்னாள் தேசியத் தலைவர் பழனிவேல் ஆதரவாளர்கள் எனக் கூறிக் கொண்ட ஒரு குழுவினர் சிறப்புப் பொதுப் பேரவைக்கு எதிராக ஆட்சேபங்களை முழங்கினர்.
மாநாட்டு மண்டப வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த கலகத் தடுப்புக் காவல் துறையினர், அந்தக் கூட்டத்தினரை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
முன்னாள் மஇகா பத்து தொகுதி உறுப்பினர் ஏ.கே.இராமலிங்கம், முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ இரமணன் ஆகியோர் முன்னின்று இந்த எதிர்ப்புக் குழுவினருக்கு தலைமையேற்றிருந்தனர்.
இந்த எதிர்ப்புக் குழுவில் சுமார் 30 முதல் 40 பேர் வரையிலான எண்ணிக்கை கொண்டவர்கள் கலந்து கொண்டதாக, சன் செய்தி இணையத் தளம் மதிப்பிட்டிருந்தது.
நேற்று நடைபெற்ற சிறப்புப் பொதுப் பேரவை சட்டவிரோதமானது என்றும், அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள தங்களையும் அனுமதிக்க வேண்டும் எனவும் இந்த எதிர்ப்புக் குழுவினர் மாநாட்டு மண்டபத்திற்கு வெளியே நின்று முழக்கமிட்டனர்.
இருப்பினும், மண்டபத்திற்குள் நுழைய அவர்களை காவல் துறையினரும், மஇகா தலைமையக பாதுகாப்புப் பிரிவினரும் அனுமதிக்கவில்லை. அவர்களைத் தடுத்து நிறுத்தினர். ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் தண்ணீர் பாட்டில்களை ஒருவருக்கொருவர் வீசியெறிந்து கொண்டபோது அங்கு பதட்டம் கூடியது. பின்னர் எதிர்ப்பாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
வெளியே நடந்த இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தால், சிறிது பதட்டம் ஏற்பட்டபோதும், இதன் தாக்கங்கள் எதுவும் மண்டபத்தில் நடந்த சிறப்பு மாநாட்டு நிகழ்வுகளைப் பாதிக்கவில்லை.
சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்ட சுமார் 1,350 மஇகா பேராளர்கள் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்துத் தீர்மானங்களையும் ஏகமனதாக நிறைவேற்றினர்.