புதுச்சேரி – புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதிய துணைநிலை ஆளுநராக முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண்பேடி நேற்று மாலை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி ஜி.ரமேஷ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடியை புதுவை துணைநிலை ஆளுநராக நியமித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டார்.
இதையடுத்து சனிக்கிழமை புதுவைக்கு வந்த கிரண்பேடிக்கு ஆளுநர் மாளிகையில் தலைமைச் செயலர் மனோஜ் பரிதா, ஐஜி பிரவீர் ரஞ்சன் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஆளுநர் மாளிகை வளாகத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. தலைமைச் செயலர் மனோஜ் பரிதா ஜனாதிபதியின் அறிவிக்கையை வாசித்தார்.
பிறகு, துணைநிலை ஆளுநராக கிரண்பேடிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரமேஷ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில், முதல்வராக பதவியேற்க உள்ள நாராயணசாமி, முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், கோகுலகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
பதவியேற்புக்கு முன்னதாக தலைமைச் செயலகத்தில் அரசுத் துறைச் செயலர்கள், இயக்குநர்களின் ஆலோசனைக் கூட்டத்தை நேற்று பிற்பகல் கிரண்பேடி கூட்டினார்.
பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் காவல் துறையின் செயல்பாடுகள், சட்டம்-ஒழுங்கு நிலைமை, துறைகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் போன்றவை குறித்து கிரண்பேடி கேட்டறிந்தார்.