சென்னை – இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஜப்பான் நாட்டின் ‘ஃபுக்குவோகா’ விருது கிடைத்துள்ளது. அனைத்துலக அளவில் இசைத்துறையில் சாதித்ததற்கு இந்த விருது அவருக்கு அளிக்கப்படவுள்ளது.
ஜப்பானின் ஃபுக்குவோகா பரிசு, ஃபுக்குவோகா என்ற நகரத்தின் சார்பிலும், யோகடோபியா என்ற அமைப்பின் சார்பிலும் வழங்கப்படுகிறது.
ஆசிய கலாச்சாரத்தை பாதுகாக்கும் தனிநபர்களுக்கு அல்லது அமைப்புக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ஃபுக்குவோகா விருது மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது.
கல்வித்துறை, கலை அல்லது கலாச்சாரம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆசிய கண்டம் சார்ந்த மனித, சமூக அறிவியல் ஆராய்ச்சியில் சாதித்தவர்களுக்கு அகாடமிக் விருது வழங்கப்படுகிறது.
ஆசியாவின் பலவகையான கலை மற்றும் கலாச்சாரத்துக்கு பங்களித்தவர்களுக்கு ஆர்ட்ஸ் அண்ட் கல்ச்சர் விருது வழங்கப்படுகிறது.
இதில், ஏ.ஆர்.ரகுமான் கிராண்ட் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுள்ளார். இந்த விருது குறித்து ஏ.ஆர்.ரகுமான் பேசுகையில், ” ஃபுக்குவோகா விருது கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கவுரவத்துக்கு நன்றி. உங்கள் அனைவரது அன்பைப் பற்றியும் தெரிந்து கொண்டதில் மிக்க சந்தோஷம். உங்கள் நகரத்துக்கு வரும் நாளை எதிர்நோக்கியுள்ளேன்” என்றார்.