திருப்பதி – ஒரே நாளில் திருமலை ஏழுமலையானை ஒரு லட்சம் பேர் தரிசனம் செய்தனர். கோடை விடுமுறை முடிவுபெற உள்ள நிலையில் திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
திருப்பதியில் நடைபெற்ற தெலுங்குதேசம் கட்சி மாநாட்டுக்கு வருகை தந்த கட்சித் தொண்டர்கள், முக்கிய பிரமுகர்கள் அனைவரும் திருமலைக்கு வந்ததால் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை சுமார் ஒரு லட்சம் பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
மேலும் 69 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாகச் செலுத்தினர். இது இந்த ஆண்டின் முதல் பெரிய பதிவு என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சித்தூர் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கோயில்களான காணிபாக்கம் வரசித்தி விநாயகர் கோயில், வாயுலிங்க ஷேத்திரமான ஸ்ரீகாளஹஸ்தி உள்ளிட்ட கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் கடந்த 3 நாள்களாக அதிகரித்துக் காணப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை சுமார் 45,000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தரிசனத்துக்காக சுமார் 4 மணிநேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 2.98 கோடி வசூலானது.
சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையைக் கணக்கிட்டதில் ரூ. 2.98 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.