Home Featured நாடு “2 இடைத் தேர்தல்களிலும் எனது அணியினர் இராமலிங்கம் தலைமையில் தே. முன்னணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வர்”...

“2 இடைத் தேர்தல்களிலும் எனது அணியினர் இராமலிங்கம் தலைமையில் தே. முன்னணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வர்” – பழனிவேல் அறிவிப்பு

1100
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இன்று தலைநகர் செந்தூலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், நடைபெறவிருக்கும் இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தனது அணியினர் தேசிய முன்னணியின் வெற்றிக்காகப் பாடுபடுவர் என அறிவித்துள்ளார்.

Palanivel-press conf-31 mayஇன்று பழனிவேல் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது…

கடந்த சில வாரங்களாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் – பத்திரிக்கையாளர்களை நேரடியாகச் சந்திக்காமல் இருந்து வந்த கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினருமான பழனிவேல் – இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார்.

#TamilSchoolmychoice

அவருடன் அவரது அணியின் தலைமைச் செயலாளராக இயங்கும் மஇகா பத்து தொகுதியின் முன்னாள் தலைவர் ஏ.கே.இராமலிங்கம், மஇகா முன்னாள் தலைமைப் பொருளாளர் டத்தோ இரமணன், தகவல் துறை பொறுப்பாளர் சிவசுப்ரமணியம் ஆகியோர் மற்ற சில தலைவர்களுடன்  கலந்து கொண்டனர்.

சுங்கை பெசார் நாடாளுமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு தனது அணியின் சார்பாக முன்னாள் மஇகா சிலாங்கூர் இளைஞர் பகுதியைச் சேர்ந்த சங்கர்ராஜ் பொறுப்பேற்பார் எனவும், சுங்கை பெசார், கோலகங்சார் இரண்டு இடைத் தேர்தல்களிலும் தேசிய முன்னணியோடு தனது அணியின் தலைமைச் செயலாளர் இராமலிங்கம் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார் என்றும் பழனிவேல் அறிவித்தார்.

மஇகா சிறப்பு மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு பழனிவேல் ஆதரவு

G-Palanivel1இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய பழனிவேல், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட மஇகா சிறப்புப் பேராளர் மாநாடு சட்டவிரோதமானது என்றும், நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது, இத்தகைய மாநாடு நடத்தப்பட்டது முறையற்றது என்றும் கூறினார்.

அவரது உரையை பத்திரிக்கை அறிக்கையாக ஆங்கிலத்தில் அவர் வாசிக்க, அந்த காணொளி சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு பேராளர் மாநாட்டில் அவரது ஆதரவுக் குழுவினர் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தது குறித்து அவருக்கு தெரியாது என்று சில தகவல் ஊடகங்களும், சமூக வலைத் தளங்களும் கருத்து தெரிவித்திருந்தன.

அதற்கு இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்புக் கூட்டத்தில் மறுப்பு தெரிவித்த பழனிவேல், சட்டவிரோதமான சிறப்பு பேராளர் மாநாட்டுக்கு எதிராக தனது ஆதரவாளர்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் குறித்து தனக்கு தெரிவிக்கப்பட்டது என்றும், தனது அணியின் தலைமைச் செயலாளரான ஏ.கே.இராமலிங்கம் மற்றும் டத்தோ இரமணன் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் தன்னிடம் தொடர்ந்து நிலவரங்களைத் தெரிவித்து வந்துள்ளனர் என்றும் பழனிவேல் கூறினார்.

K.Ramalingam MIC Batu“தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யவே எனது ஆதரவாளர்கள் அந்த சிறப்பு மாநாட்டில் கலந்து கொள்ள முயற்சி செய்தனர்” என்றும் பழனிவேல் கூறியுள்ளார்.

தனது அணியின் தலைமைச் செயலாளராக ஏ.கே.இராமலிங்கம் (படம்) இயங்குகின்றார் என்பதை பழனிவேல் மறுஉறுதிப்படுத்தும் வண்ணம் இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பு அமைந்திருந்ததாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

மேலும், சிறப்பு பேராளர் மாநாட்டிற்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தனக்குத் தெரியாது என சமூக வலைத் தளங்களில் பரவி வந்த செய்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வண்ணம் பழனிவேலுவின் இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பு அமைந்திருந்தது.

சோதிநாதன் கலந்து கொள்ளவில்லை

Dato S.Sothinathanஇன்றைய கூட்டத்தில் பழனிவேல் அணியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான டத்தோ எஸ்.சோதிநாதன் (படம்) கலந்து கொள்ளவில்லை. ஆனால், சில நாட்களுக்கு முன்னால் கோலகங்சாரில் நடைபெற்ற பழனிவேல் அணியினரின் மத்திய செயலவைக் கூட்டத்திற்கு சோதிநாதன் தலைமை தாங்கினார்.

அந்த மத்திய செயலவைக் கூட்டத்தில் பழனிவேல் கலந்து கொள்ளவில்லை.

கோலகங்சாரில் நடைபெற்ற பழனிவேல் அணியினரின் மத்திய செயலவைக்குத் தலைமை தாங்கியபோது சோதிநாதன் கோலகங்சார் இடைத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு ஆதரவாக பழனிவேல் அணியினர் தீவிரமாக ஈடுபடுபவர் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில்தான், இரண்டு இடைத் தேர்தல்களிலும் இராமலிங்கம் தனது அணியினரின் பொறுப்பாளராகச் செயல்படுவார் என பழனிவேல் அறிவித்துள்ளார்.

சிறப்பு பேராளர் மாநாட்டுக்கு எதிராக பழனிவேல் அணியினரால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ, டத்தோ சோதிநாதன் இதுவரை அதிகாரபூர்வ கருத்து எதனையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.