கோலாலம்பூர் – துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹாமிடியின் மருமகன் டத்தோ சைட் அல்மான் சைட் அல்வி பல் அறுவைச் சிகிச்சையின்போது எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார்.
அவருக்கு வயது 44. தலைநகர் பங்சாரில் உள்ள ஒரு பல் மருத்துவமனையில் அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டபோது, அவர் சுயநினைவை இழந்தார். பின்னர் அவர் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள மலாயாப் பல்கலைக் கழக மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார்.
தற்போது அரசாங்க அலுவல் காரணமாக தோக்கியோ சென்றுள்ள சாஹிட் ஹாமிடி உடனடியாக நாடு திரும்புகின்றார் என்றும் உள்துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இன்று காலை சாஹிட் கோலாலம்பூர் வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காலமான சைட் அல்மான், சாஹிட் ஹாமிடியின் மூத்த மகள் டத்தோ நூருல் ஹிடாயாவின் கணவராவார். வணிகத்தில் ஈடுபட்டு வந்த அவர், 4-பி எனப்படும் இளைஞர் இயக்கத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
தனது கணவரின் மறைவு குறித்து தெரிவித்த நூருல் ஹிடாயா “அவர் ஒரு சிறந்த தந்தை. பொறுப்பான கணவர். நான் விவாதிக்கக் கூடிய ஒருவரை இழந்துள்ளேன். விடைபெறுங்கள் காதலரே” என உருக்கமுடன் தனது இன்ஸ்டாகிராம் இணையத் தளத்தில் பதிவிட்டுள்ளார். கணவருடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
சைட் அல்மானின் நல்லடக்கச் சடங்குகள் இன்று காஜாங் சுங்கை ராமால் லூவார் முஸ்லீம் மயானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.