Home Featured நாடு சுங்கை பெசார் இடைத் தேர்தல்: பக்காத்தான் ஹாராப்பான் வேட்பாளராக, அமானா நெகாராவின் அசார் அப்துல் ஷூக்கோர்!

சுங்கை பெசார் இடைத் தேர்தல்: பக்காத்தான் ஹாராப்பான் வேட்பாளராக, அமானா நெகாராவின் அசார் அப்துல் ஷூக்கோர்!

837
0
SHARE
Ad

செகிஞ்சான் – சுங்கை பெசார் நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளராக பக்காத்தான் ஹாராப்பான் சார்பில் 50 வயதான முன்னாள் ஆசிரியரான அசார் அப்துல் ஷூக்கோர் (படம்) நிறுத்தப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இங்கு மும்முனைப் போட்டி ஏற்படுவது உறுதியாகியுள்ளது.

azhar abdul shukorமுன்பு எதிர்க்கட்சிகள் இணைந்து அமைத்திருந்த பக்காத்தான் ராயாட் கூட்டணியிலிருந்து பாஸ் கட்சி சில கருத்து வேறுபாடுகளால் வெளியேறியது. அதைத் தொடர்ந்து, பாஸ் இரண்டாக உடைந்து அதிலிருந்து ஒரு பிரிவினர் பார்ட்டி அமானா நெகாரா என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்தனர்.

பின்னர் பிகேஆர், ஜசெக, பார்ட்டி அமானா நெகாரா ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து பக்காத்தான் ஹாராப்பான் என்ற புதிய கூட்டணியைத் தோற்றுவித்தன. இந்தக் கூட்டணி சார்பில்தான் தற்போது அசார் சுங்கை பெசார் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

நேற்றிரவு செகிஞ்சானில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் இவரை வேட்பாளராக அமானா நெகாரா கட்சித் தலைவர் முகமட் சாபு அறிவித்தார். இந்தக் கூட்டத்தில் பிகேஆர் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில், ஜசெக தலைவர் லிம் கிட் சியாங் என பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Azhar-Abdul-Shukor-Sungei Besar -amanah candஎதிர்க்கட்சிக் கூட்டணி வேட்பாளரான அசார் உரையாற்றுகிறார். அருகில் மற்ற தலைவர்கள் (படம்: நன்றி ஃபிரி மலேசியா டுடே)

ஓர் உள்ளூர்க்காரரான அசார், வணிகத் துறையில் ஈடுபட்டிருப்பதோடு சுங்கை பெசார் வட்டாரத்தில் நன்கு அறிமுகமானவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டுகளில் இந்த வட்டாரத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த   அப்துல் ஷூக்கோர் சிராட் என்பவரின் மகன்தான் அசார் என்பதும் அவருக்கு இருக்கும் மற்றொரு சாதக அம்சமாகும்.

மும்முனைப் போட்டியால் யாருக்கு சாதகம்?

இந்தத் தொகுதியில் மும்முனைப் போட்டி ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து யாருக்கு சாதகமாக வாக்குகள் மாறும் என்ற ஆர்வம் அரசியல் பார்வையாளர்களிடையே ஏற்பட்டிருக்கின்றது.

ஹூடுட் விவகாரத்தால், முஸ்லீம் அல்லாதோரின் வாக்குகள் கிடைக்காமல், பாஸ் கட்சி கண்டிப்பாகப் பின்னடைவைச் சந்திக்கும் என்ற நிலையில், சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் முந்தப் போவது தேசிய முன்னணி வேட்பாளரா அல்லது பக்காத்தான் வேட்பாளரா என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வியாகும்.

ஜூன் 5ஆம் தேதி வேட்புமனுத் தாக்கலும், ஜூன் 18இல் வாக்களிப்பும் இங்கு நடைபெறவிருக்கின்றன.

கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் நோரியா காஸ்னோன் 399 வாக்குகள் வித்தியாசத்தில் பாஸ் கட்சி வேட்பாளரை வெற்றி கொண்டார். கடந்த மே 5ஆம் தேதி சரவாக்கில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் நோரியா மரணமடைந்தார்.

சுங்கை பெசாரில் தேசிய முன்னணி சார்பில் சுங்கை பெசார் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளடங்கியுள்ள சுங்கை பாஞ்சாங் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் புடிமான் முகமட் சோடி போட்டியிடுகின்றார்.

பாஸ் கட்சியின் சார்பாக, மேரு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் டாக்டர் அப்துல் ரானி ஓஸ்மான் களமிறக்கப்பட்டுள்ளார்.

சுங்கை பெசாரில் 42,836 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 67.18 சதவீதம் மலாய் வாக்காளர்கள், 30.68 சதவீதம் சீன வாக்காளர்கள், 1.91 சதவீதம் இந்திய வாக்காளர்கள், 0.23 சதவீதம் மற்ற இனத்தவர்கள் ஆவர்.