கோலாலம்பூர் – நேற்று இலண்டனிலிருந்து புறப்பட்டு, கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த மாஸ் விமானம், மோசமான வானிலை காரணமாக, ஆட்டம் கண்டதில் அதிலிருந்த பயணிகளும், விமான ஊழியர்களும் லேசான காயமடைந்துள்ளனர்.
‘பே ஆஃப் பெங்கால்’ எனப்படும் வங்காள விரிகுடா மீது அந்த மாஸ் விமானம் பறந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
மாஸ் ஏ380 ரக ஏர்பஸ் விமானம் (மாதிரிப் படம்)
ஏர்பஸ் A380 ரக அந்த விமானம் எம்எச் 1 (MH1) என்ற வழித்தடத்தைக் கொண்டதாகும். நேற்று மாலை 6.00 மணியளவில் அந்த விமானம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறங்கிய பின்னர், காயமடைந்தவர்களுக்கு மருத்துவ அதிகாரிகள் சிகிச்சை அளித்தனர்.
இந்தத் தகவல்களை வெளியிட்ட மலேசிய விமானநிலைய நிறுவனமான மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட், எத்தனை பேர் காயமடைந்தனர் என்ற விவரங்களை வெளியிடவில்லை. 378 பயணிகளும், ஊழியர்களும் அந்த விமானத்தில் பயணம் செய்தனர்.
இந்த சம்பவத்திற்குக் காரணம் முழுக்க முழுக்க தங்களையும் மீறிய வானிலை நிலையே காரணம் என்றும் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோருவதாகவும் மலேசிய ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் நிறுவனம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்தது.