சென்னை – நீண்ட காலமாக தீவிரமாக திமுகவுடன் இணைந்து அரசியல் நடத்தி வந்தவர் நடிகர் நெப்போலியன் (படம்). வில்லிவாக்கம் தொகுதியின் திமுக சார்பிலான சட்டமன்ற உறுப்பினராகவும் 2001 முதல் 2006 வரை பணியாற்றியவர்.
பின்னர், சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்தக் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
இருப்பினும், நடந்து முடிந்த தமிழகத் தேர்தலில் நெப்போலியன் பாஜக சார்பில் அதிகமான அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபடவில்லை.
இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்ட தமிழக பாஜக-வின் 7௦ பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் பட்டியலில் நெப்போலியன் பெயர் இடம் பெறவில்லை. நடப்பு தமிழக பாஜக துணைத் தலைவராக இருந்த வானதி சீனிவாசன், பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பாஜக துணைத் தலைவர்களாக, எம்.ஆர்.காந்தி, எஸ்.சுரேந்திரன், பேகம், குப்புராமு, சுப.நாகராஜன், எம்.சுப்ரமணியன், எஸ்.பி.சரவணன், பி.டி.குமார், எம்.என்.ராஜா, சிவகாமி பரமசிவம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், ஏற்கனவே துணைத் தலைவர் பொறுப்பில் இருந்த நடிகர் நெப்போலியனின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வேறு பதவிகளும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
நெப்போலியனின் மாமாவான கே.என்.நேரு இன்னும் திமுகவில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகின்றார். இந்த முறை திமுக சார்பில் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
அமைச்சரின் உதவியாளர் – பின்னர் நடிகர்
நெப்போலியன் முதன் முதலாக திரையில் தோன்றிய புதுநெல்லு புதுநாத்து தமிழ்த் திரைப்படம்…
கே.என்.நேரு தமிழக அமைச்சரவையில் அமைச்சராக இருந்தபோது, அவருக்கு உதவியாளராகப் பணியாற்றி அரசியலில் அடியெடுத்து வைத்தவர் நெப்போலியன். ஆனால் பின்னர், பாரதிராஜாவின் கண்பட்டு, ‘புதுநெல்லு புதுநாத்து’ படத்தில் வில்லனாக நடித்து திரையுலகில் ஒரு சுற்று வலம் வந்தார். பல படங்களில் கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணசித்திரப் பாகங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.
பின்னர் மீண்டும் திமுகவில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்ட அவர் 2001இல் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில்போட்டியிட்டு வெற்றி பெற்றார். மத்திய அரசாங்கத்தில் இணை அமைச்சராகவும் நெப்போலியன் பணியாற்றியுள்ளார்.
பின்னர் கொஞ்சகாலம் அரசியலில் ஏற்பட்ட கசப்புகளால் ஒதுங்கியிருந்த நெப்போலியன் அமெரிக்காவில் தொழில்நுட்பத் துறை வணிகத்தில் தீவிர கவனம் செலுத்தி வந்தார். அதன்பின்னர் பாஜகவில் சேர்ந்தார்.
தற்போது, பாஜகவிலும் அவர் ஒதுக்கப்பட்டிருப்பதால், இனி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி தமிழக அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
பாஜகவில் நீடிப்பாரா? – அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வாரா? – அல்லது மீண்டும் திமுகவுக்கு திரும்புவாரா? – என்ற ஆரூடங்கள் தற்போது எழுந்திருக்கின்றன.