சென்னை – அண்மையக் காலமாக, பிரம்மாண்டமாகத் தயாராகும் தமிழ்ப்படங்களின் இசை வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வந்தன. காரணம், இந்த இசை வெளியீட்டு விழாக்களின் ஒளிபரப்பு உரிமைகளை தமிழகத்தின் முக்கிய தொலைக்காட்சிகள் தாங்களே பெரிய விலை கொடுத்து நேரடியாக வாங்குவதுதான்!
ஒரு படத்தின் ஒளிபரப்பு உரிமையை தொலைக்காட்சி அலைவரிசை வாங்கும்போது, அதன் இசை வெளியீட்டுக்கான ஒளிபரப்பு உரிமையையும் சேர்த்தே வாங்கி விடுகின்றது.
அந்த வகையில் எதிர்வரும் ஜூலை 1ஆம் தேதி வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படும் ரஜினிகாந்தின் ‘கபாலி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், தற்போது ரஜினி அமெரிக்காவில் ஓய்வில் இருப்பதால், உடனடியாக ‘கபாலி’யின் இசை வெளியீடு நடைபெற வாய்ப்பில்லை எனக் கூறப்படுகின்றது.
மேலும் படத்தின் பாடல்கள் வெளியீட்டை இனியும் தள்ளி வைக்கக் கூடாது – இரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றமாக மாற்றக் கூடாது – என்ற எண்ணத்தில் எதிர்வரும் ஜூன் 12ஆம் தேதி ‘கபாலி’ படத்தின் பாடல்களைக் கொண்ட இசைத்தட்டுகளை நேரடியாகக் கடைகளில் விற்பனைக்குக் கொண்டு வரும் புதிய நடைமுறையை கபாலி தொடக்கி வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கபாலி படத்தின் இசையை சந்தோஷ் நாராயணன் (படம்) அமைத்திருக்கின்றார்.
அண்மையில் தமிழக வார இதழ் ஒன்றில் கபாலி குறித்த தகவல்களை வழங்கியிருந்த அந்தப் படத்தின் கலை இயக்குநர், இராமலிங்கம், படம் எதிர்வரும் ஜூலை 1ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவித்திருக்கின்றார்.