Home Featured நாடு அரசியல் பார்வை: இடைத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகளின் மொத்த வாக்குகள் தேசிய முன்னணியை மிஞ்சுமா? பாஸ் கட்சியை...

அரசியல் பார்வை: இடைத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகளின் மொத்த வாக்குகள் தேசிய முன்னணியை மிஞ்சுமா? பாஸ் கட்சியை விட அமானா கூடுதல் வாக்குகள் பெறுமா?

663
0
SHARE
Ad

Kuala Kangsar by-election-masturaகோலாலம்பூர் – ஜூன் 18ஆம் தேதி நடைபெறவிருக்கும் சுங்கை பெசார், கோலகங்சார் இரண்டு நாடாளுமன்ற இடைத் தேர்தல்களிலும் மூன்று பிரதான கட்சிகள் நேருக்கு நேர் மோதுவதால், தேசிய முன்னணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என அரசியல் பார்வையாளர்கள் கருதினாலும், மற்றொரு முக்கிய அரசியல் நிலவரத்தை இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தக் கூடும்.

தேசிய முன்னணிக்கு எதிராக விழக்கூடிய மொத்த வாக்குகள் எத்தனை என்பது மக்களால் பார்க்கப்படப் போகும் மற்றொரு முக்கிய அம்சமாகும். இதன் மூலம், நஜிப் தலைமைத்துவத்திற்கு எதிரான மக்கள் அலை எப்படி இருக்கின்றது என்பதை ஓரளவுக்குக் கணிக்க முடியும்.

பாஸ், அமானா இணைந்த கட்சிகள் பெறும் மொத்த வாக்குகள் தேசிய முன்னணியை விட அதிகமானதாக இருந்தால், அதன்மூலம் ஒரு முக்கிய அரசியல் செய்தி தெரிவிக்கப்படும். அதாவது, முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கூறி வருவதைப் போன்று, நஜிப்பின் தலைமைத்துவத்திற்கு எதிரான எதிர்ப்பு அலை மக்களிடையே பெருகி வருகின்றது என்பதுதான் அது.

#TamilSchoolmychoice

இதன் காரணமாக, நஜிப் பதவி விலக வேண்டுமென்ற எதிர்ப்பு அம்னோவில் மேலும் வலுக்கக் கூடும்.

எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் காத்திருக்கும் செய்தி

Parti Amanah Negara - logoஇந்த இரண்டு நாடாளுமன்ற இடைத் தேர்தல் முடிவுகளும், மற்றொரு காரணத்திற்காகவும், எதிர்க்கட்சித் தலைவர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன.

பாஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற பார்ட்டி அமானா நெகாரா எந்த அளவுக்கு மலாய்க்காரர்களிடையே செல்வாக்கு பெற்றிருக்கின்றது?

அமானா, பாஸ் கட்சியை விட கூடுதல் வாக்குகள் பெறுமா?

என்பது போன்ற கேள்விகளுக்கும் இந்த இரண்டு இடைத் தேர்தல் முடிவுகள் விடையளிக்கக் கூடும்.

அமானா, பாஸ் என்ற இரண்டு எதிர்க்கட்சிகளின் இணைந்த மொத்த வாக்குகள் எத்தனை என்பதை வைத்துத்தான், எதிர்க்கட்சிகளின் – 14வது பொதுத் தேர்தலை நோக்கிய – அடுத்த கட்ட கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் இனி அமைந்திருக்கும்.

pakatan-harapan_பாஸ் கட்சியை விட அமானா கூடுதல் வாக்குகள் பெற்றுவிட்டால், அதன்பின்னர், அமானா கட்சி, பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியில் வலுவான கட்சியாக தொடர்ந்து நிலைப் பெறும் என்பதோடு, பாஸ் கட்சிக்கு மாற்று அரசியல் சக்தியாக அமானா இனி உருவெடுக்கும்.

ஆனால், புறநகர், கிராமப் புறங்களில் உள்ள மலாய் வாக்காளர்களிடையே அமானா இன்னும் போதிய அடையாளத்தையோ, வரவேற்பையோ பெறவில்லை என்றும் – பாஸ் கட்சிக்கு மாற்றான அரசியல் சக்தியாக இன்னும் உருவெடுக்கவில்லை என்ற கருத்தும் நிலவுகின்றது.

இந்த நிலையில்தான், அமானா கட்சி பாஸ் கட்சியை விட கூடுதல் வாக்குகள் பெற முடியுமா என்ற கேள்வி மிகுந்த அரசியல் முக்கியத்துவம் பெறுகின்றது.

ஹூடுட் பிரச்சனையால் பாஸ் கட்சிக்குப் பின்னடைவுதான்!

hadi-awang-sungei besar- pasசீன, இந்திய வாக்குகள் ஹூடுட் பிரச்சனையால், இந்த முறை பாஸ் கட்சியின் பக்கம் செல்லக் கூடிய வாய்ப்பில்லை. அந்த வாக்குகள் அமானாவுக்கே செல்லும். இவ்வாறு நடந்து விட்டால், பாஸ் கட்சியிலும் அதன் தலைவர் ஹாடி அவாங்கிற்கு எதிரான தலைமைத்துவப் போராட்டம் தொடங்கக் கூடும்.

பாஸ் கட்சியில் நீண்ட காலம் செயல்பட்டு வந்த முக்கிய தலைவர்களை அமானா கட்சியிடம் இழந்தது –

அம்னோவிடம் நெருக்கம் பாராட்டுவது –

ஹூடுட் சட்டத்தை கொண்டுவரத் துடிப்பது –

ஆகிய காரணங்களால்தான் பாஸ் கட்சி மக்களிடையே செல்வாக்கு இழந்து வருகின்றது என்பது இந்த இடைத்தேர்தல்களின் மூலம் நிரூபணம் ஆகக் கூடும். அதன்பின்னர் தலைமைத்துவ மாறுதல்களுக்கான நெருக்குதல்கள் அந்தக் கட்சியில் தோன்றக் கூடும்.

இடைத் தேர்தல்கள் முடிவுகள் மூலம் பாஸ் கட்சியில் தலைமைத்துவ மாற்றங்கள் ஏற்பட்டால் அதன் பயனாக சில அரசியல் திருப்புமுனைகள்  ஏற்படக் கூடும்.

நடைபெறக் கூடிய சாத்தியமுள்ள சில திருப்புமுனைகள்…

Pakatan Rakyat -அந்த நாள் மீண்டும் வருமா? – அன்று பக்காத்தான் ராயாட் கூட்டணியாக இணைந்திருந்த தலைவர்கள்…

முதலாவது திருப்புமுனை – மீண்டும் அமானாவில் இணைந்துள்ள முன்னாள் பாஸ் தலைவர்கள் – மீண்டும் தங்களின் தாய்க் கட்சிக்குத் திரும்பக் கூடும். அவர்களை மீண்டும் இணைத்துக் கொள்ளும் வகையில், அதற்கேற்ப, பாஸ் கட்சியின் புதிய தலைமைத்துவமும் தனது அரசியல் செயல்பாடுகளை – கொள்கைகளை – மாற்றிக் கொள்ளக் கூடும்.

இரண்டாவது திருப்புமுனை- பாஸ் கட்சி மீண்டும் பக்காத்தான் ஹாராப்பான் எதிர்க்கட்சிக் கூட்டணித் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, ஹூடுட் சட்டத்தை அமுல்படுத்தும் முயற்சிகளை கைவிட்டு, ஒரே எதிர்க்கட்சி கூட்டணியாக உருவாவதற்கான அடித்தளம் அமையக் கூடும்.

மூன்றாவது திருப்புமுனை – அம்னோவுடன் நெருக்கம் பாராட்டுவதால்தான் பாஸ் கட்சியின் செல்வாக்கு சிதைகிறது என்ற எண்ணம் வலுவுடன் வேரூன்றப்பட்டு, பாஸ் கட்சி, அம்னோவிடம் இருந்து விலகிச் செல்லக் கூடிய வாய்ப்பும் ஏற்படும்.

ஆனால், அதே சமயம்,

பாஸ் கட்சியை விட, அமானா குறைவான வாக்குகளைப் பெற்று விட்டால், அதன்பின்னர் பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியும், தங்களின் எதிர்கால அரசியல் கூட்டணி குறித்த மாற்று சிந்தனைகளை – முன்வைக்கக் கூடும். இனியும், பாஸ் கட்சி இல்லாத ஒரு கூட்டணியை வெற்றிக் கூட்டணியாக உருமாற்றிக் காட்டுவது அரசியல் ரீதியாக பெரும் சிரமம் என்பதை அத்தகைய தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டும்.

அதன் பயனாக, எதிர்க்கட்சிகள் தங்களின் சில சுய கௌரவங்களை விட்டுக் கொடுத்து விட்டு, மீண்டும் ஒன்றிணையக் கூடிய சாத்தியங்கள் நிகழலாம்.

இப்படியாக, பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு விடை காணும் களமாகவும்,

மலேசியாவின் எதிர்கால அரசியலை எப்படி நகர்த்திச் செல்வது என்பதை வியூகம் வகுக்க அரசியல் கட்சிகளுக்கு கற்றுக்கொடுக்கப் போகும் காரணியாகவும் –

இரண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் அமையப் போகின்றன!

-இரா.முத்தரசன்