இயக்குநர் அபிஷேக் சௌபே இயக்கத்தில், இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் இணைத் தயாரிப்பிலும் உருவாகியிருக்கும் இப்டம், அண்மையில் தணிக்கைக் குழுவின் பார்வைக்குச் சென்றது.
படம் பார்த்த தணிக்கை குழுவினர், பஞ்சாப் மாநிலம் தொடர்புடைய சில சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு பரிந்துரைத்துள்ளனர்.
ஆனால் அதற்கு படக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து மும்பை உயர் நீதிமன்றத்தில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான “ஃபேண்டம் பிலிம்ஸ்’ சார்பில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு, நீதிபதிகள் எஸ்.சி. தர்மாதிகாரி, ஷாலினி ஆகியோர் முன்பு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், நீதிபதிகள், “இந்தத் திரைப்படத்தில் பஞ்சாப் தொடர்பான காட்சிகளையும், வசனங்களையும் நீக்கினால் கதையின் சாராம்சமே கெட்டுப் போய்விடும். ஒரு நபரையோ, இடத்தையோ மையமாகக் கொண்டு கதை அமைத்தால் திரைப்படத்தில் அந்த இடம் அல்லது நபர் காண்பிக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனில், முழுப் படத்தையும் நீக்க வேண்டும்.”
“இந்த விவகாரத்தில் திரைப்படத் தணிக்கை அமைப்பினர் மிகவும் கடுமையாக நடந்துகொள்ளத் தேவையில்லை. அவ்வாறு நடந்துகொண்டால், திரைப்படத் துறையில் சிறந்த படைப்பாளிகள் உருவாவது தடைபட்டுப் போகும்.” என்று தெரிவித்தனர்.
மேலும், “இன்றைய தலைமுறையினர் மிகவும் பண்பட்டவர்களாக இருக்கின்றனர். எனவே, ஆபாசமான படங்களுக்கு அவர்கள் ஆதரவளிக்க மாட்டார்கள். அவ்வாறு ஆபாசமாக இருந்தால் அந்தத் திரைப்படம் ஓடாது. எனவே, இதுபோன்ற திரைப்படங்களுக்கு தேவையில்லாத இலவச விளம்பரத்தை தணிக்கைத் துறையினர் தேடித் தர வேண்டாம்” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், உட்தா பஞ்சாப் படத்துக்கு ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டு வரும் ஜூன் 17-ம் தேதி வெளியாகவுள்ளது.