கோலாலம்பூர்- (நேற்று காலமான கிளந்தான் கோக் லானாஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ அப்துல்லா அகமட் அரசியல் வாழ்க்கையில் புதைந்திருந்த சில மர்மமான – இன்றுவரை தீர்க்கப்படாத இரகசியங்களைப் பின்னோக்கிப் பார்த்து, அவருடைய அரசியல் பங்களிப்பையும் – செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் பார்வையில் விவரிக்கின்றது இந்தக் கட்டுரை)
மலேசியாவின் சில மர்மமான, வரலாற்றுபூர்வமான அரசியல் இரகசியங்களைத் தன்னகத்தே கொண்டிருந்த (கிளந்தான்) கோக் லானாஸ் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் டான்ஸ்ரீ அப்துல்லா அகமட் (படம்) நேற்று பிற்பகல் தனது 79வது வயதில் காலமானார்.
புற்றுநோய் காரணமாக தலைநகர் பந்தாய் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இன்றைய இளம் தலைமுறையினரில் பலருக்கு அவர் யார் என்பதுகூட அவ்வளவாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், கடந்த கால மலேசிய அரசியல் வரலாறு தெரிந்தவர்களுக்கு அவரது அரசியல் முக்கியத்துவமும், பங்களிப்பும் அவ்வளவு எளிதாக மறக்கப்படக் கூடியதல்ல என்பது தெரிந்திருக்கும்.
இளம் வயது அப்துல்லா அகமட் (கோட்டுடன் கைதட்டுபவர்) – வலது கோடியில் முன்னாள் பிரதமர் துன் அப்துல் ரசாக்…
1976ஆம் ஆண்டுகளில், துன் ரசாக் பிரதமராக இருந்த காலகட்டத்தில் துன் ரசாக்கின் சக்தி வாய்ந்த அரசியல் செயலாளராகப் பணியாற்றியவர் அப்துல்லா அகமட்.
கம்யூனிஸ்ட் தொடர்புகளுக்காக உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது!
துன் ரசாக் காலமான பின்னர் துன் ஹூசேன் ஓன் (படம்) பிரதமராகப் பதவியேற்ற சமயத்தில், திடீரென ஒரு நாள் அப்துல்லா அகமட்டும், துன் ரசாக்கின் பத்திரிக்கைச் செயலாளர் அப்துல்லா மஜிட் என்பவரும், நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கையின் நிர்வாக ஆசிரியர் ஏ.சமாட் இஸ்மாயிலும் உள்நாட்டுப் பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
முன்னாள் பிரதமர் துன் ரசாக்கிற்கு நெருக்கமான இவர்களின் திடீர் கைது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பதோடு, அவர்கள் கம்யூனிஸ்ட் சித்தாந்த நடவடிக்கைகள் மூலம் நாட்டின் அரசாங்கத்தையே கவிழ்ப்பதற்கு சதி செய்தனர் என அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும் அரசியல் வட்டாரங்களில் மிகுந்த பரபரப்பை ஏறபடுத்தியது.
அந்த காலகட்டங்களில் சீனா, ரஷியா நாடுகளின் கம்யூனிஸ்ட் சித்தாந்த ஊடுருவல்கள் உள்நாட்டில் மிகவும் கடுமையாகப் பார்க்கப்பட்டன. அப்துல்லா அகமட்டுடன் சுமார் 900 பேர் அப்போது உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்பதுடன், அவர்களில் பெரும்பாலோர் கம்யூனிஸ்ட் சித்தாந்த தொடர்புகள் – நம்பிக்கைகளுக்காகத் – தடுத்து வைக்கப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சம்.
எனவே, பிரதமரின் அலுவலகத்திலேயே, அவரது செயலாளர்களின் மூலமாக கம்யூனிஸ்ட்டுகளின் ஆதிக்கமா என்ற அதிர்ச்சி அலைகளும் அப்போது நாட்டில் எழுந்தன.
ஆனால், கைது செய்யப்பட்ட அப்துல்லா அகமட் உள்ளிட்டவர்கள், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்ததால், அவர்களின் கைது குறித்த உண்மைகள் இன்றுவரை வெளியிடப்படவில்லை. சில நாடுகளில் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் அரசாங்க இரகசியங்கள் பகிரங்கமாக மக்களின் முன் வைக்கப்படும்.
நமது நாட்டில் அத்தகைய நடைமுறை இல்லாததால், அப்துல்லா அகமட் கைது குறித்த தகவல்கள் இனியும் வெளிவருமா என்பதும் சந்தேகம்தான்!
துணையமைச்சராக இருந்தவர்
1974 முதல் 1976 வரை துன் ரசாக் அமைச்சரவையில் பிரதமர் துறையின் துணையமைச்சராக இருந்தவர் அப்துல்லா அகமட் (படம்).
கோலகங்சார் அரச மலேசியக் கல்லூரியில் பயின்ற அவருடன் ஒன்றாகப் படித்தவர் பின்னாளில் காவல் துறைத் தலைவராக இருந்த (ஐஜிபி) துன் ஹனிப் ஓமார் ஆவார்.
இலண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் தனது கல்வியைத் தொடர்ந்த அப்துல்லா அகமட் நாடு திரும்பியதும், 1957இல் ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் (இப்போது நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் – அப்போது சிங்கப்பூருக்கும் அன்றைய மலாயாவுக்கும் சேர்த்து ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் என்ற பெயரில் அந்தப் பத்திரிக்கை வெளிவந்தது) பத்திரிக்கையில் பணியாற்றினார்.
அவரது திறமைகளை கண்டு கொண்ட துன் ரசாக் (படம்-கீழே) 1962ஆம் ஆண்டிலேயே தனது சிறப்பு செயலாளராக அவரை நியமித்தார். பின்னர் தனது அரசியல் செயலாளராகவும் அப்துல்லா அகமட்டை அவர் நியமித்தார்.
மாச்சாங் (கிளந்தான்) நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த அப்துல்லா 1974 முதல் 1976 வரை பிரதமர் துறையின் துணையமைச்சராக இருந்தார். சிறிது காலம் விஞ்ஞான, சுற்றுச் சூழல் அமைச்சராகவும் துன் ரசாக் அமைச்சரவையில் இருந்தார் எனத் தெரிவிக்கின்றது பெர்னாமாவின் செய்திக் குறிப்பு.
1976இல் துன் ரசாக்கின் மரணத்தைத் தொடர்ந்து, அப்துல்லாவின் வாழ்க்கையிலும் விதி அவருக்கு எதிராக விளையாடத் தொடங்கியது.
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது
அப்துல்லா அகமட் 1976இல் கைது செய்யப்பட்டபோது, உள்துறை அமைச்சராக இருந்தவர் டான்ஸ்ரீ கசாலி ஷாபி. இவருக்கும், துன் ஹூசேனுக்கும் இடையிலான அரசியல் உள் பகைமைதான் அப்துல்லா அகமட் குழுவினரின் கைதுக்குக் காரணம், மற்றபடி கம்யூனிஸ்ட் சித்தாந்தமெல்லாம், அரசியலுக்காக சுமத்தப்பட்ட ஜோடனைகள் என்ற மறைமுகக் கருத்தும் அப்போது நிலவியது.
துன் ஹூசேன் ஓன் அமைச்சரவையில் அப்போது துணைப் பிரதமராக இருந்த மகாதீர் முகமட்டின் நெருக்கமான ஆதரவாளர் அப்துல்லா அகமட், என்பதும் அப்போது பல்வேறு ஊகங்களுக்கும் ஆரூடங்களுக்கும் வழிவகுத்தன.
மகாதீர்-துங்கு ரசாலி- ஆகியோருடன் அப்துல்லா அகமட் (வெள்ளைத் தொப்பியுடன்)
அடுத்த துணைப் பிரதமராக வர ஆசை கொண்டிருந்த கசாலி ஷாபி, அந்தப் பதவியை ஹூசேன் ஓன், தனக்குத் தராமல், மகாதீருக்குத் தந்ததற்காக ஆத்திரம் கொண்டு அவருக்கு நெருக்கமான அப்துல்லா அகமட் குழுவினரைக் கைது செய்து கம்யூனிஸ்ட் அனுதாபிகள் என்ற குற்றச்சாட்டை சுமத்தினார் என்றும் ஒரு சாரார் கூறி வந்தனர்.
அப்துல்லா அகமட்டுக்கும், கசாலி ஷாபிக்கும் இடையிலும் கடுமையான அரசியல் பகைமை இருந்தது என்பது அப்போது உலவிய மற்றொரு வதந்தி!
ஆனால், உண்மையான அரசியல் காரணங்கள் என்ன என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். இந்த விவகாரத்தில் கம்யூனிஸ்ட் ஊடுருவல்கள் இருந்தன என்று எழுந்த குற்றச்சாட்டுகளால் அனைவரும் மௌனம் காத்தனர். இனியும் அவர்களுடனேயே அவர்களின் இரகசியங்களும் வெளிவராமலே புதைந்து போகும் என்பதுதான் நிதர்சனம்!
மகாதீர் காலத்தில் அப்துல்லா அகமட்டின் கை ஓங்கியது.
அப்துல்லா அகமட்-மகாதீர் இடையில் இருந்த நெருக்கம் குறித்த ஆரூடங்களில் – ஊகங்களில் சில உண்மைகளும் இருக்கலாம் என்பதை எடுத்துக் காட்டுவதுபோல, சில சம்பவங்கள் மகாதீர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்றன.
1981 ஜூலையில் ஹூசேன் ஓன் பதவி விலக, அவருக்குப் பின் பிரதமராகப் பொறுப்பேற்ற மகாதீர் செய்த முதல் வேலை உள்துறை அமைச்சராக இருந்த கசாலி ஷாபியை அந்தப் பதவியிலிருந்து நீக்கி, வெளியுறவுத் துறை அமைச்சராக நியமித்ததுதான்!
அடுத்த கட்டமாக மகாதீர் செய்தது, அப்போது வரை, சுமார் ஐந்தாண்டு காலமாக தைப்பிங் கமுந்திங் சிறைச்சாலையில் வாடிக் கொண்டிருந்த அப்துல்லா அகமட்டையும், அவரது தோழர்களையும் விடுதலை செய்ததுதான்.
அதன்பின்னர்தான் அப்துல்லாவின் அரசியல் வளர்ச்சியும் மகாதீர் காலத்தில் விசுவரூபம் எடுத்தது.
சிறையிலிருந்து விடுதலையான அவர் அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகம் சென்று படித்து முதுகலைப் பட்டம் பெற்றார்.
மீண்டும் கிளந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் – ஐநா நிரந்தரப் பிரதிநிதி
1986ஆம் ஆண்டில், அவரை கிளந்தான் மாநிலத்தின் கோக் லானாஸ் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பளித்தார் மகாதீர். அப்போது முதல் கோக் லானாஸ் டோலா என அப்துல்லா அகமட் அழைக்கப்பட்டார்.
1990ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், கோக் லானாஸ் தொகுதியில் அப்துல்லா அகமட் தோல்வியடைய அவரை நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாட்டு மன்றத்தின் மலேசியாவின் பிரதிநிதியாக நியமித்தார் மகாதீர்.
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஐந்து ஆண்டுகள் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களுக்காக விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர், பின்னாளில் ஐக்கிய நாட்டு சபையின் மலேசியாவின் பிரதிநிதியாக நியமிக்கப்படுவது – என்ன ஒரு முரண்பாடு பாருங்கள்!
1995 வரை ஐந்தாண்டுகள் ஐநாவின் மலேசியப் பிரதிநிதியாகப் பணியாற்றிவிட்டு நாடு திரும்பிய அவர் உத்துசான் மலாயு பத்திரிக்கையின் இயக்குநர் வாரியத்தில் நியமிக்கப்பட்டார்.
2000ஆம் ஆண்டில் அவர் நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கைக் குழுமத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். 2001 முதல் 2003 வரை அந்தப் பத்திரிக்கையின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.
2003ஆம் ஆண்டில் மகாதீரின் பதவி விலகலைத் தொடர்ந்து, அப்துல்லா அகமட்டின் அரசியல், அம்னோ, அரசாங்க ஈடுபாடுகளும் ஒரு முடிவுக்கு வந்தன.
அப்துல்லா அகமட்டின் நல்லுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தும் பிரதமர் (படம்: நன்றி – நஜிப் ரசாக் டுவிட்டர் பக்கம்)
தனது தந்தை துன் ரசாக்குடன் பணியாற்றிய அப்துல்லா அகமட்டுக்கு, பிரதமர் நஜிப் துன் ரசாக் அவரது இல்லம் சென்று தனது இறுதி மரியாதையைச் செலுத்தியிருப்பதும், அவரின் கடந்த காலப் பணிகளுக்கு புகழாரம் சூட்டியிருப்பதும், அப்துல்லாவின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக இருக்கின்றது.
இவ்வாறாக, பல சுவையான, சுவாரசியமான, அதிரடித் திருப்பங்களைக் கொண்ட,அப்துல்லா அகமட்டின் நீண்ட கால அரசியல் வாழ்க்கை நேற்றுடன் ஒரு நிறைவுக்கு வந்துள்ளது.
இருப்பினும்,
1976இல் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களுக்காக அவர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டது ஏன்?
உண்மையிலே கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களோடு அவருக்குத் தொடர்பிருந்ததா?
அல்லது அவரது கைது அரசியல் பகைமையா – பழிவாங்கலா?
என்பது போன்ற மர்மமான – இரகசியமான தீர்க்கப்படாத கேள்விகளும் அவருடனேயே நேற்றுடன் புதைந்து விட்டன!
-இரா.முத்தரசன்