Home Featured தொழில் நுட்பம் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கானோர் வரிசை பிடித்து நிற்கும் ஆப்பிள் தொழில்நுட்ப மேம்பாட்டாளர்களின் மாநாடு தொடங்குகின்றது!

அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கானோர் வரிசை பிடித்து நிற்கும் ஆப்பிள் தொழில்நுட்ப மேம்பாட்டாளர்களின் மாநாடு தொடங்குகின்றது!

982
0
SHARE
Ad

Apple reports low iPhone salesகுப்பர்ட்டினோ (அமெரிக்கா) – உலகப் புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனம் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் நடத்தும் மிக முக்கியமான நிகழ்ச்சி, பதிவு பெற்ற ஆப்பிள் தொழில்நுட்ப மேம்பாட்டாளர்களின் ஆண்டு (Apple’s Annual Developer Conference) மாநாடாகும்.

உலகம் முழுவதிலும் செயல்பட்டு வரும் ஆப்பிள் நிறுவனத்தின் பதிவுபெற்ற தொழில்நுட்ப மேம்பாட்டாளர்கள் ஒன்றுகூடும் இந்த நிகழ்ச்சி (World Wide Developer Conference) இன்று அமெரிக்காவில் ஆப்பிள் அமைந்திருக்கும் குப்பர்ட்டினோ நகரில் தொடங்குகின்றது.

இந்த அனைத்துலக மாநாட்டில் ஆண்டுதோறும் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரையிலான எண்ணிக்கை கொண்ட மேம்பாட்டாளர்கள் இந்தத் தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள்.

#TamilSchoolmychoice

இதில் கலந்து கொள்ள விரும்பும் மேம்பாட்டாளர்கள் முதலில் இணையம் வழி பதிவு செய்ய வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் இருந்த நடைமுறைப்பட்டி, முதலில் பதிவு செய்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. இதன் காரணமாக, ஆசியா போன்ற தொலைதூர நாடுகளின் மேம்பாட்டாளர்களுக்கு உடனடியாகப் பதிவு செய்து கொண்டு கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்காத சூழ்நிலை இருந்தது.

காரணம் பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விடும்.

Apple-WWDC-photo-1மாநாடு நடைபெறும் அரங்கம்…

ஆனால், கடந்த சில ஆண்டுகளில் ஆப்பிள் இந்த பதிவு நடைமுறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் பயனாக, ஒவ்வொரு வட்டாரத்திலும் சில ஒதுக்கீடுகள் என்ற முறையில், முதலில் வருபவர்களுக்கே முதற் சலுகை என்றில்லாமல், பகிர்ந்து தேர்வு செய்யப்படுவதால்,  அனைத்து தரப்பு மேம்பாட்டாளர்களும் பங்கு கொள்ளும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல வட்டாரங்களில் இருந்தும் மேம்பாட்டாளர்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகின்றது.

மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சிகள் சரியாக காலை 10.00 மணிக்குத் தொடங்கும். இன்று திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு மாநாடு தொடங்கும்போது முதல் அங்கமாக முக்கிய உரையொன்று இடம் பெறும். இதில்தான் ஆப்பிள் கருவிகள் குறித்த புதிய தகவல்கள் தெரிவிக்கப்படும்.

அதாவது மலேசிய நேரம் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.00 மணிக்கு இந்த நிகழ்ச்சிகள் தொடங்கும்.

அதிகாலை 4.00 மணிமுதல் வரிசை பிடித்து நிற்பார்கள்

மாநாட்டில் கலந்து கொள்ளும் மேம்பாட்டாளர்கள், நல்ல, வசதியான இருக்கை கிடைக்கிறதோ இல்லையோ, அரங்கினுள் எங்காவது ஒரு மூலையில் எப்படியாவது இடம் பிடிப்பதற்காக, அதிகாலையிலேயே அரங்கத்துக்கு வெளியே அணிவகுத்து நிற்கத் தொடங்கி விடுவார்கள்.

Apple-wwdc-photo 2ஆப்பிள் மேம்பாட்டாளர்களின் மாநாட்டில் கலந்து கொள்ளும் கணினித் துறை வல்லுநரும், ஆப்பிளின் பதிவு பெற்ற மேம்பாட்டாளர்களில் ஒருவருமான முத்து நெடுமாறன் மாநாட்டு அரங்கத்தின் முன்…

மாநாட்டிற்குத் தாமதமாக வருபவர்களுக்கு மாநாட்டு அரங்கத்தில் இடம் கிடைக்காது. அதற்குப் பதிலாக, பக்கத்து அறைகளில் நிரம்பி வழியும் கூட்டத்துடன் நேரலையாக ஒளிபரப்பாகும் காணொளி (வீடியோ) மூலம்தான் அவர்கள் அந்த நிகழ்ச்சிகளைக் கண்டு இரசிக்க முடியும்.

நம்புவீர்களோ இல்லையோ, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் இந்த வரலாற்றுபூர்வ தொழில் நுட்ப மாநாட்டில் இருக்கை பிடிப்பதற்காக, அதிகாலை 4.00 மணி முதற்கொண்டு – அதாவது சுமார் 6 மணி நேரத்திற்கு முன்பாகவே, மேம்பாட்டாளர்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்து விடுவார்கள்!

அந்த வரிசை நம்ப முடியாத அளவுக்கு நீண்டு கொண்டே போகும்.

ஒருசிலர் முதல் நாள் இரவே, அரங்கத்தின் நுழைவாயில் அருகே படுத்துத் தூங்கிக் காத்திருக்கும் காட்சிகளும் இங்கு சர்வ சாதாரணம்.

இந்த ஆண்டு நடைபெறும் மாநாடும், அதில் இடம்பெறும் முக்கிய தொடக்க உரையும், ஆப்பிள் தலைமையகத்திற்கு அருகில் அமைந்திருக்கும் பில் கிராஹாம் சிவிக் ஆடிட்டோரியம் (Bill Graham Civic Auditorium) என்ற அரங்கில் நடைபெறுகின்றது. மாநாட்டின் மற்ற நிகழ்ச்சிகள் புகழ்பெற்ற மாஸ்கோன் சென்டர் (Mascone Centre) என்ற இடத்தில் நடைபெறும்.

தொழில்நுட்ப மென்பொருளுக்கு முக்கியத்துவம் தரும் மாநாடு

கடந்த சில ஆண்டுகள் முன்புவரை இந்த அனைத்துலக மேம்பாட்டாளர் மாநாடு, ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக்கிந்தோஷ் கணினிகள், புதிய ஐபோன் இரகங்கள் போன்றவற்றை அறிமுகப்படுத்தும் தளமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

Apple and FBI to face off in courtஆனால், அண்மைய சில ஆண்டுகளாக, இந்த மாநாடு, மென்பொருள் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட அம்சங்களில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் முழுக்க முழுக்க தொழில்நுட்ப மேம்பாட்டாளர்கள் என்பதும், மாநாட்டின் அமைப்பு முறையே தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டது என்பதும்தான் இந்த மாற்றத்திற்கான காரணம்!

இந்த ஆண்டில் ஆப்பிள் தனது புதிய ஐபோன் மற்றும் ஐபேட் கருவிகளுக்காக புதிய ரக ஐஓஎஸ் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதோடு, மேக்கிந்தோஷ் கணினிகளுக்காக, புதிய பெயருடன் ஓஎஸ்எக்ஸ் (OS X) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆப்பிள் கைக்கெடிகாரங்களை இயக்குவதற்காக, ‘வாட்ச் ஓஎஸ்’ (watchOS) என்ற தொழில்நுட்ப மென்பொருளையும், ஆப்பிள் தொலைக்காட்சி கருவிகளை இயக்கும் புதிய டிவிஓஎஸ் (tvOS) தொழில்நுட்பத்தையும் ஆப்பிள் அறிமுகப்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகின்றது.

இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படவிருக்கும் ஐஓஎஸ் 10, புதிய வடிவத்தோடு, பல முக்கிய மேம்பாடுகளையும் கொண்டிருக்கும். ஆப்பிளின் குரல் உதவி தொழில்நுட்பமான சீரி (Siri) மேலும் பரவலான பயன்பாடுகளோடு அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் ஐஓஎஸ் கருவிகளில் மட்டுமல்லாமல், மேக் கணினிகளிலும் இந்த தொழில்நுட்ப அம்சம் புகுத்தப்படும் வண்ணம் விரிவாக்கம் செய்யப்படலாம் என்றும் கூட, தொழில்நுட்ப வட்டாரங்களில் ஆரூடங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

ஏற்கனவே, தனது ஐபோன் 4எஸ் கருவிகளில் இந்த சீரி அம்சத்தைப் ஆப்பிள் புகுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, இதுபோன்ற தொழில்நுட்ப அம்சங்களை கூகுள், மைக்ரோசாஃப்ட், அமேசோன், போன்ற நிறுவனங்களும் அறிமுகப்படுத்தியுள்ளன.

இந்த நிறுவனங்களின் தொழில்நுட்ப அறிமுகங்கள் ஆப்பிள் அறிமுகப்படுத்திய சீரி அம்சத்தை விட முந்திக் கொண்டு செல்வதால், அதனை முறியடிக்கும் வகையில் கூடுதல் அதிநவீன அம்சங்களுடன் ஆப்பிளை முன்னெடுத்துச்செல்லும் வகையில் அதிரடி உள்ளடக்கங்களை அறிமுகப்படுத்த ஆப்பிள் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகின்றது என தொழில்நுட்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதிய அறிவிப்புகள் எதுவாக இருந்தாலும், ஆப்பிள் மேம்பாட்டாளர்கள் மாநாட்டில் என்ன நடக்கப் போகின்றது என்பதைக் காண அனைத்துலக தொழில்நுட்ப வட்டாரங்கள் ஆவலுடன் காத்திருக்கின்றன.

காரணம், ஆப்பிள் எது செய்தாலும் அதுவே தொழில் நுட்ப உலகின் அளவுகோலாகப் பார்க்கப்படும். புதிய தொழில்நுட்பப் போக்கையும் உருவாக்கும். மற்றவர்களும் அடுத்தடுத்து அதே போன்ற அம்சங்களைத் தங்களின் கருவிகளில் வழங்கும் நடைமுறை தொடங்கும்.

இன்று அமெரிக்க நேரப்படி காலை 10.00 மணிக்கு (மலேசிய நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.00 மணிக்குத் தொடங்கும் ஆப்பிள் மேம்பாட்டாளர்கள் அனைத்துலக மாநாட்டின் முதல் முக்கிய தொடக்க உரையை ஆப்பிள் இணையம் வழியும், தனது ஆப்பிள் கருவிகளின் வழியும் உலகம் முழுமையிலும் நேரலையாக ஒளிபரப்பும்.

ஆர்வமுள்ளவர்கள் கீழ்க்காணும் இணையத் தொடர்பின் மூலம் மாநாட்டின் தொடக்க உரையையும், அதன் அறிவிப்புகளையும் கண்டு இரசிக்கலாம்.

http://www.wired.com/2016/06/how-to-watch-wwdc-2016/

-செல்லியல் தொகுப்பு

(பின்குறிப்பு: ஆப்பிள் நிறுவனத்தின் பதிவு பெற்ற தொழில்நுட்ப மேம்பாட்டாளர்களில் ஒருவரான முத்து நெடுமாறன், ஆண்டுதோறும், மேற்குறிப்பிட்ட ஆப்பிள் தொழில்நுட்ப மேம்பாட்டாளர்கள் மாநாட்டில் தவறாது கலந்து கொள்பவர். இந்த ஆண்டும் அமெரிக்காவில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கின்றார். அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்தக் கட்டுரையை செல்லியல் வெளியிடுகின்றது)