பாரிஸ் – பிரான்ஸ்ஸ் நாட்டில் இலட்சக்கணக்கானோர் ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளுக்காக குவிந்துள்ள நிலையில், நேற்று பாரிஸ் புறநகர் பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி எனக் கருதப்படும் ஒருவன் போலீஸ்காரரைத் தாக்கிக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தத் தீவிரவாதி மீது பதில் தாக்குதல் நடத்திய பிரான்ஸ் காவல் துறையினர் அவனை சுட்டுக் கொன்றனர். பிரான்ஸ் நாட்டு நேரம் நேற்று திங்கட்கிழமை இரவு 9.00 மணியளவில் (மலேசிய நேரம் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.00) இந்த சம்பவம், நடைபெற்றது.
பிரான்ஸ் நாட்டு போலீஸ்காரர் ஒருவரை அவரது வீட்டின் முன்னால் தாக்கி, கத்தியால் பலமுறை குத்திக் கொன்ற அந்தத் தீவிரவாதி பின்னர் அந்த போலீஸ்காரரின் வீட்டினுள் நுழைந்து, அவரது மனைவியையும், மகனையும் பிணையாகப் பிடித்து வைத்துக் கொண்டான்.
இதனைத் தொடர்ந்து தீவிரவாதி இருந்த போலீஸ்காரரின் வீட்டை காவல் துறையினர் முற்றுகையிட்டுத் தாக்குதல் நடத்தியதில் அந்தத் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். அந்த வீட்டை பின்னர் சோதனையிட்டபோது, அங்கு ஒரு பெண்ணின் சடலம் இருந்ததாகவும், பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் எவ்வித காயங்களும் இன்றி காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்த சடலம் போலீஸ்காரரின் மனைவி என்றும், சிறுவன் அவரது மகன் என்றும் நம்பப்படுகின்றது.