Home Featured தொழில் நுட்பம் ஆப்பிள் மேம்பாட்டாளர் மாநாட்டில் புதிய அறிவிப்புகள்- மென்பொருள் மேம்பாடுகள் என்ன?

ஆப்பிள் மேம்பாட்டாளர் மாநாட்டில் புதிய அறிவிப்புகள்- மென்பொருள் மேம்பாடுகள் என்ன?

883
0
SHARE
Ad

Apple-wwdc-குப்பர்ட்டினோ – திங்கட்கிழமை (ஜூன் 13ஆம் தேதி) தொடங்கி இன்றுடன் நிறைவடையும் அனைத்துலக ஆப்பிள் தொழில்நுட்ப மேம்பாட்டாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட பெரும்பாலான அறிவிப்புகளில்  பயனீட்டாளர்களுக்கு நேரடியாகப் பயன்படக் கூடிய முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை.

மாறாக, அவை ஆப்பிள் கருவிகளின் மென்பொருள் மேம்பாட்டாளர்களைக் குறிவைத்து, அவர்களின் செயல்பாடுகளுக்காக உதவும் நோக்கிலும், அடுத்த கட்ட புதிய தொழில்நுட்பங்களைத் தெரிவிக்கும் நோக்கிலும் விடுக்கப்பட்ட அறிவிப்புகளாகும்.

அவற்றில் சில முக்கிய அம்சங்களை இங்கே பார்க்கலாம்:-apple-i0s10-wwdc

  • ஆப்பிள் கருவிகளின் அனைத்து இயங்கு தளங்களும் (operating systems) தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக ஐஓஎஸ் 10 (iOS 10), மேக்ஓஎஸ் சியாரா (macOS Sierra), வாட்ச் ஓஎஸ்3 (watchOS 3), டிவிஓஎஸ்2 (tvOS 2), ஆகிய மென்பொருட்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
  • ஐஓஎஸ் 10 மென்பொருளில் செய்யப்பட்டுள்ள மேம்பாடுகளில், குறிப்பிடத்தக்கது ஐமெசேஜ் மென்பொருளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மேம்பாடு. இதில் பல புதிய அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளன. தற்போது இதில் ஒட்டுகள் (stickers), பெரிய உணர்ச்சிக் குறிகள் (larger emojis), பொருத்தமான உணர்ச்சிக் குறிகளைப் பரிந்துரைக்கும் அறிவார்ந்த வசதி (intelligent suggestions for appropriate emojis), உணர்ச்சிகளுக்கு ஏற்றவாறு நகரும் படங்கள் (animated messages according to emotions) ஆகிய அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.Apple-ios10-wwdc-emoji
  • அதுமட்டுமல்லாமல் ஆப்பிள் நிறுவனத்தைத் தவிர, மற்ற மேம்பாட்டாளர்களும் அவரவர் விரிவாக்கங்களை அறிமுகப் படுத்தும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • மேலே குறிப்பிடப்பட்டுள்ள மேம்பாடுகள் யாவும் ஐபோன், ஐபேட், ஆப்பிள் கடிகாரம் மற்றும் ஆப்பிள் கணினிகளிலும் இடம்பெற்றிருக்கின்றன.Apple-MacOS-wwdc
  • ‘சீரி’ மென்பொருளிலும் நிறைய, புதிய மேம்பாடுகள் உட்புகுத்தப்பட்டுள்ளன. ஆப்பிள் நிறுவனத்திற்கு உரிமையான உள்ளடக்கங்களில் மட்டுமின்றி, சீரி இனி மூன்றாம் தரப்பு மேம்பாட்டாளர்கள் உருவாக்கும் குறுஞ்செயலிகளிலும் (apps) இடம்பெற முடியும். உதாரணமாக, ஒரு பயனர் தனது கைத்தொலைபேசியிடம் குரல்வழி உரையாடல் மூலம் ஒரு வாட்ஸ்எப் குறுஞ்செய்தி அனுப்புவதற்கோ, அல்லது ஸ்கைப் செயலியைப் பயன்படுத்தி ஒரு அழைப்பைச் செய்வதற்கோ கட்டளையிட முடியும். இந்த வசதி இதுவரை ஆப்பிள் குறுஞ்செயலிகளுக்கு மட்டும் இருந்து வந்தது. இனி மற்ற மூன்றாம் தரப்பு குறுஞ்செயலி மேம்பாடுகளிலும் இது இடம் பெறும். சீரி, மேக் கணினிகளிலும் இனி இடம்பெறும்.Apple-AppleWatch-OS
  • வாட்ச்ஓஎஸ் மென்பொருளும் பலமுனைகளில் மேம்படுத்தப்பட்டுள்ளதில், தற்போது அதன் செயல்பாடுகளும், வேகமாகச் செயல்படும் ஆற்றலும் அதிகரித்துள்ளன. குறிப்பாக சுகாதாரம் தொடர்பான அம்சங்களில் பல மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய மேம்பாடுகளைத் தொடர்ந்து பயனர்கள் சுகாதாரம் உடல்நலம் தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணித்து வரலாம். உதாரணமாக, நடந்த தூரம், ஏறிய படிக்கட்டுகளின் எண்ணிக்கை, போன்ற அன்றாட இலக்குகளை மேலும் அணுக்கமாகவும், சிறந்த முறையிலும் கண்காணித்து வர முடியும்.apple-wwdc-siri
  • ஐபோனுக்கும், மெக் கணினிகளுக்கும் இடையே இருக்கும் தொடர் செயலாக்க வசதிகள் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, இந்தப் புதிய இயங்குதளங்களில், ஐபோனில் ஒரு செய்தியைத் தேர்ந்தெடுத்து, அதனை நகலெடுத்தபின் மெக் கணினிக்குச் சென்று அதனை ஒட்டலாம்.
  • மேற்குறிப்பிட்ட மேம்பாடுகள் தவிர்த்து பயன்பாட்டை எளிமையாக்கும் பல்வேறு கூறுகள் பன்மடங்காக மேம்படுத்தப்பட்டுள்ளன. மேம்பாட்டாளர்கள் தங்களின் குறுஞ்செயலி உருவாக்கத்தில் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய எண்ணிலடங்கா புதிய தொழில்நுட்ப வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
#TamilSchoolmychoice

Apple-wwdc-q-2திங்கட்கிழமை தொடங்கிய ஆப்பிள் மேம்பாட்டாளர் மாநாட்டு அரங்க நுழைவாயிலில் காத்திருந்த பங்கேற்பாளர்கள்…

  • அறிவிக்கப்பட்ட அனைத்து புதிய மென்பொருள் மேம்பாடுகளின் வடிவங்களும் மாநாட்டு தொடக்க நாளன்றே மேம்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்டன.
  • பயனர்களுக்கு உரிய தேர்வுப் பதிப்புகள் (beta) ஜூலை மாதத்தில் கிடைக்கும் வண்ணம் வெளியிடப்படும். இந்த புதிய மென்பொருட்களின் இறுதி வடிவங்கள் ஆண்டின் பிற்பகுதியில் முழுமையாக வெளியிடப்படும்.

-செல்லியல் தொகுப்பு

Apple-wwdc-photo 2(பின்குறிப்பு: ஆப்பிள் நிறுவனத்தின் பதிவு பெற்ற தொழில்நுட்ப மேம்பாட்டாளரான கணினித் துறை வல்லுநர் முத்து நெடுமாறன், கடந்த 13 ஆண்டுகளாக தவறாமல்  ஆப்பிள் மேம்பாட்டாளர் மாநாட்டில் கலந்து கொண்டு வருபவர். இந்த ஆண்டும் ஆப்பிள் மேம்பாட்டாளர் மாநாட்டில் கலந்து கொண்டு அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மேற்கண்ட செய்திக் கட்டுரையை செல்லியல் வாசகர்களுக்காக வழங்கியிருக்கின்றோம்)