கோலாலம்பூர் – அபு சயாப் பிடியில் இருந்து 4 சரவாக் மாலுமிகளையும் விடுவிக்க வசூல் செய்யப்பட்ட 12 மில்லியன் ரிங்கிட் நன்கொடையில் அரசாங்கத்தின் பங்கு என்ன? என்பதை உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி விளக்கமளிக்க வேண்டும் என பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார்.
“பிணைத்தொகைக்காகக் கடத்தப்படுவதும், அது போன்றவைகளுக்காக நன்கொடை வசூலித்து உபயோக்கிப்பதையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என சாஹிட் கூறியுள்ளார். அப்படியானால், இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அந்த அதிகாரிகள் ஏன் 12 மில்லியன் ரிங்கிட் நிதி வசூலில் தலையிட்டார்கள்? என்பதற்கும் அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும்” என்றும் கோபிந்த் சிங் தெரிவித்துள்ளார்.
வசூல் செய்யப்பட்ட அந்த நன்கொடை கடத்தல்காரர்களுக்குப் பதிலாக பிலிப்பைன்சிலுள்ள இஸ்லாம் அமைப்பு ஒன்றிற்கு வழங்கப்பட்டதாக சாஹிட் அறிவித்துள்ளதன் படி பார்த்தால், அந்த நால்வரையும் விடுவிக்கவே வசூல் செய்யப்பட்டது என்ற கண்ணோட்டம் ஏற்படுகின்றது.
எனவே அரசாங்கம் அதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் கோபிந்த் குறிப்பிட்டுள்ளார்.