பினாங்கு – இந்தோனிசியாவில் கரையில் தத்தளித்த ஈழத் தமிழர்களுக்கு ஆச்சேவில் தற்காலிக அடைக்கலம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவருக்கும் தக்க உதவிகளை செய்வோம் என இந்தோனிசிய அரசாங்கம் தெரிவித்துள்ளதாக பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேராசிரியர் இராமசாமி வெளியிட்டுள்ள தகவலில், “ஆச்சே ஆளுநர் டாக்டர் சைனி அப்துல்லா அனௌட்டிடம் பேசினேன். தங்களிடம் அடைக்கலம் புகுந்துள்ள ஈழத்தமிழர்களுக்கு அவர் தேவையான உதவிகளைச் செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தீர்வு காண நான் உதவுவதாகவும் தெரிவித்துள்ளேன். மேலும், இந்தோனிசியாவின் துணை அதிபர் ஜூசோப் காலாவிடமும் பேசினேன். அவர்களுக்கு தற்காலிகமாக தேவையான பாதுகாப்பு உதவிகளை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்” என்று இராமசாமி குறிப்பிட்டுள்ளார்.
புது வாழ்வையும், வேலைவாய்ப்பையும் தேடி, 43 ஈழத் தமிழர்கள் படகு ஒன்றில் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்து கொண்டிருந்த போது, அவர்களது படகு பழுதடைந்த நிலையில், இந்தோனிசியாவில் கரை ஒதுங்கியது.
முதலில் அவர்களை அனுமதிக்காத இந்தோனிசியா திரும்பிச் செல்லும் படி எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், அவர்களுக்கு அடைக்கலம் தந்து உதவும் படி, பினாங்கு துணை முதல்வர் இராமசாமி கேட்டுக் கொண்ட நிலையில், தற்போது ஆச்சேவில் தற்காலிகமாகக் கூடாரம் அமைத்து அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இராமசாமியின் செயலாளர் சதீஸ் முனியாண்டி தலைமையிலான மலேசியக் குழு ஒன்று, ஆச்சே சென்று அங்கு அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆச்சேவில் தற்போது தற்காலிகக் கூடாரங்கள் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ள 43 அகதிகளில் 20 ஆண்கள், 14 பெண்கள், 9 சிறுவர்கள் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.