Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: ‘அப்பா’ – காலத்திற்கு ஏற்ற மிகச் சிறந்த படம் – தயாளன் ஒரு முன்னுதாரணம்!

திரைவிமர்சனம்: ‘அப்பா’ – காலத்திற்கு ஏற்ற மிகச் சிறந்த படம் – தயாளன் ஒரு முன்னுதாரணம்!

580
0
SHARE

Appa4கோலாலம்பூர் – அப்பா .. இந்த மந்திரச் சொல்லை வைத்து எத்தனையோ சிறந்த திரைப்படங்களை உருவாக்கி ரசிகர்களை நெகிழ்ச்சியில், உணர்ச்சியில் திளைக்க வைத்திருக்கிறது தமிழ் சினிமா.

அந்த வகையில் இதோ இன்னொரு அப்பா.. காலத்திற்கு ஏற்ற அப்பா..

ஒரு தந்தை எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி நடந்துக் கொள்ளக் கூடாது என்பதை மிக அழகாக கதாப்பாத்திரங்களின் மூலமாகவும், வசனங்கள் மூலமாகவும் காட்சிப்படுத்தி திரைப்படத்தை இயக்கியிருப்பதோடு, அதில் தானே சிறந்த அப்பாவாகவும் வாழ்ந்திருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி.

கதைச்சுருக்கம் 

ஒரே தெருவில் வசிக்கும் மூன்று வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்ட அப்பாக்கள், தங்களது பிள்ளைகளை அவர்கள் பாணியில் வளர்க்கிறார்கள்.

Appaஅவர்களில், பிள்ளையின் உணர்வை மதித்து அவனுக்குப் பிடித்ததில் செயல்பட ஊக்கும்விக்கும் அப்பா சமுத்திரக்கனி, தன் பிள்ளை டாக்டராகத் தான் வர வேண்டும் என்று அவனை தனது கட்டுப்பாட்டிலேயே இயக்கும் அப்பாவாக தம்பி இராமையா, இருக்குற எடமே தெரியக்கூடாது என்று மகனின் ஆர்வத்தையெல்லாம் முடக்கிப் போடும் அப்பாவாக நமோ நாராயணன்.

இந்த மூன்று அப்பாக்களும் தங்களது பிள்ளைகளை வளர்க்கும் போது குடும்பத்திலும், சமூகத்திலும் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகள், பிள்ளைகள் வளர்ந்த பின்னர் அவர்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகள், அதை அவர்கள் கையாளும் விதம் ஆகியவற்றை மிக சுவாரசியமான காட்சிகளின் வழி சொல்லியிருக்கிறது ‘அப்பா’ திரைப்படம்.

ரசித்தவை

‘சாட்டை’ படத்தில் ஒரு ஆசிரியராக நம் மனதைக் கவர்ந்து ‘இப்படி ஒரு ஆசிரியர் நமக்குக் கிடைத்திருக்கக் கூடாதா?” என்று ஏங்க வைத்த அதே தயாளன் (சமுத்திரக்கனி) இப்படத்தில் அப்பாவாக வருகிறார்.

Appa1“வெற்றி … நீ சரி தான்யா.. இந்த ஸ்கூலு தான் சரியில்ல” என்று மகனை ஆறுதல் படுத்துவதாகட்டும், பருவ வயதில் பெண் ஒருவரைப் பார்த்தவுடன் படபடப்பாக இருப்பதாகக் கூறும் தன் மகனிடம், “பெண்கள் என்பவர்கள் ஒரு எதிர்பாலினம் அவ்வளவு தான். ஆண்களைப் போல அவர்களுக்கும் வலி, உணர்வுகள் எல்லாம் இருக்கிறது” என்று புரியவைப்பதாக இருக்கட்டும் சமுத்திரக்கனியின் நடிப்பு அற்புதம்.

அதற்கு நேர் எதிர் தந்தையாக ஆத்திரமும், பெருங்கோபமுமாக வருகிறார் சிங்கம்பெருமாள் (தம்பி இராமையா), சாட்டையில் பார்த்த அதே சிறந்த நடிப்பு.

“என் மகன் யாரு தெரியுமா? டாக்டர் சக்கரவர்த்தி சிங்கம்பெருமாளா வரப்போறவன்.. அவன் கிட்ட ஐ லவ் யூ சொல்லி வளைச்சிப் போடப் பாக்குறியா?” என்று அவசரப்பட்டு மகனின் தோழியைக் கண்டிப்பதும், அவமதிப்பதுமாக நாம் இச்சமூகத்தில் ஆங்காங்கே பார்க்கும் சில தந்தையர்களைக் கண்முன்னே நிறுத்துகிறார்.

“சார் தாத்தா காலத்துல இருந்தே அடிமைத்தனமா வாழ்ந்து வந்தவங்க எங்க குடும்பம்.. இருக்குற எடமே தெரியாம இருந்தவங்களை என் மகன் மூலமா மாத்திக் காட்டிட்டாரு இவரு” என்று தனது தாழ்வுமனப்பான்மையில் உடைந்து நொறுங்கும் காட்சியில் அசர வைக்கிறார் நமோ நாராயணன்.

Appa2இவர்களுக்குச் சிறிதும் சளைக்காமல் ஈடு கொடுத்து நடித்திருக்கிறார்கள் ‘காக்கா முட்டை’ விக்னேஸ், ராகவ், நசாத், கேபரியலா, யுவாஸ்ரீ. இவர்கள் நாலு பேருக்கும் நடிப்பதற்கு இடமளிக்கும் வகையில் ஏகப்பட்ட காட்சிகள். அதற்கு ஏற்ப, அவர்களும் பாசம், சோகம், நெகிழ்ச்சி என உணர்வுகளை முகபாவணைகளில் வெளிப்படுத்தி படம் பார்க்கும் நம்மை கண்கலங்க வைத்துவிடுகிறார்கள் இந்த இளம் தலைமுறையினர்.

இவர்களோடு, படத்தில் அம்மாவாக, அப்பாவாக, ஆசிரியர்களாக, நண்பர்களாக வரும் நிறைய கதாப்பாத்திரங்கள் அப்படியே நாம் நிஜவாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களைப் போல் உள்ளனர்.

திரைக்கதை அமைப்பைப் பொறுத்தவரையில் ஒரே நேர் கோட்டில் சீராகச் செல்கிறது. என்றாலும் ஆங்காங்கே வரும் சம்பவங்களில் ஏற்படும் பரபரப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

வீட்டில் மகனின் நண்பர்களை அனுமதித்து, அவர்கள் அன்போடு பழகும் காட்சிகள், குள்ளமாக இருக்கும் மகனின் நண்பனுக்கு தன்னம்பிக்கை வளர்த்து புகழ்பெறச் செய்யும் காட்சி, திருமணம் ஆகாமல் இருக்கும் இருவரை சேர்த்து வைக்கும் காட்சி என பல காட்சிகள் பாடமாக அமைகின்றன.

Appa 6ரிச்சர்டின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் மிக எதார்த்தம். ஆனால் படத்தின் பட்ஜட் காரணமாகவோ என்னவோ, ஒரு பிரம்மாண்டம் இல்லாதது போல் உள்ளது. விக்னேஸ் கடலில் நீச்சலடிக்கும் போது கீழிலிருந்து அப்படியே கேமரா மேலே சென்று கப்பலையும், விக்னேசையும் அருகருகே காட்டும் அந்தக் காட்சி அற்புதம். (நெருடல்: விக்னேஸ் குளிர்பானத்தைக் குடித்துவிட்டு அந்த அந்தக் காலி டின்னை ‘கடலில் வீசும்’ காட்சியை மட்டும் வெட்டியிருக்கலாம். இன்று பல அரிய கடல்வாழ் உயிரினங்களின் இறப்பிற்குக் காரணமே கடலில் வீசப்படும் குப்பைகள் தான் என்கிறது ஆய்வு)

இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசையும் பல காட்சிகளில் அப்படியே மனதை உருக்கிவிடுகின்றது. பல காட்சிகளில் மகிழ்ச்சியில் துள்ள வைக்கிறது.

படத்தில் சலிப்படையும் படியாக திரைக்கதையிலோ, காட்சிகளிலோ எங்கும் தொய்வு இல்லை. அதேவேளையில், சமுத்திரக்கனியின் மகனாக வரும் ‘காக்கா முட்டை’ விக்னேஷ் நல்ல தேர்வு தான் என்றாலும், அவரது கதாப்பாத்திரத்தை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி, நடிப்பையும், முகபாவணைகளையும் மாற்றி அமைத்திருக்கலாம்.

காரணம், இப்படி ஒரு அப்பா இருந்தால், இப்படி ஒரு மகன் இருப்பான் என்பதற்கு ஆதாரமே அக்கதாப்பாத்திரம் தான்.. அக்கதாப்பாத்திரம் நீச்சலில் கின்னஸ் சாதனை படைக்கின்றது, நண்பர்களுக்கு உதவுகின்றது அதெல்லாம் சரி.. ஆனால் அக்கதாப்பாத்திரத்தில் இன்னும் சின்னச் சின்ன நுணுக்கமான குணங்களைச் சேர்த்திருக்கலாம்.

மற்றபடி ‘அப்பா’ –  காலத்திற்கு ஏற்ற மிகச் சிறந்த படம் – தந்தைகளுக்கெல்லாம் தயாளன் ஒரு முன்னுதாரணம்!

-ஃபீனிக்ஸ்தாசன்

Comments