கோலாலம்பூர் – புனித ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து, பொறுமை காத்து, இரவு முழுவதும் வணக்க வழிபாடுகளில் மூழ்கி நோன்புப் பெருநாளை வரவேற்கும் இசுலாமிய அன்பர்களுக்கும் சகோதரர்களுக்கும் எனது இதயப்பூர்வமான நோன்புப் பெருநாள் வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்வதாக மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் விடுத்துள்ள தனது நோன்புப் பெருநாள் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
“ஏக இறைவனை வணங்கி வாழ்வதும், இல்லாதோருக்கு வழங்கி வாழ்வதும், எல்லோரோடும் இணங்கி வாழ்வதுமே இசுலாமிய வாழ்வியல் நெறி ஆகும். எனவே, இந்த நோன்பு பெருநாளில் இல்லாருக்குக் கொடுத்துச் சகோதரத்துவத்தை மேம்படுத்தி அனைவரும் ஒருமித்தக் கருத்தோடு சமமாக நின்று இப்பெருநாளை வரவேற்க வேண்டும்” என்றும் அவர் தனது செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார்.
“பல இன மக்கள் வாழும் இந்நாட்டில், பெருநாள் காலக்கட்டங்களில் சகிப்புத்தன்மையைக் கடைப்பிடித்து ஒருவருக்கொருவர் அணுசரித்து வாழும் பழக்கத்தைக் கடைப்பிடித்தல் அவசியமாகின்றது. பொறுப்பற்ற ஒரு சிலரால் ஆங்காங்கே நடைபெறும் இனவாதச் சம்பவங்களைச் சகோதரத்துவமிக்க அன்பின் வழி கடைப்பிடிப்பதன் வழி நாட்டின் அமைதித் தன்மையையும் சுபிட்சத்தையும் நிலைநாட்ட முடியும்” என்றும் சுப்ரா தெரிவித்துள்ளார்.
“தொடர்ந்து, இப்பெருநாளில் உணவு பழக்க முறையில் கட்டுப்பாட்டினைக் கடைப்பிடித்து உடல் நலன் மீதும் கவனம் செலுத்தி, அதிகமான இனிப்பு வகைகளை உட்கொள்ளாமல் சுகாதாரத்துடனும் நோன்பு பெருநாளைக் கொண்டாட வேண்டும். இந்நோன்பு பெருநாள் கொண்டாட்ட காலங்களில் உணவை அதிகளவு விரயம் செய்யாமல் உணவு முறையில் மிதமான போக்கையும் கடைப்பிடிக்க வேண்டும்” எனவும் சுகாதார அமைச்சருமான சுப்ரா கூறியுள்ளார்.
“மேலும், தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்பவர்கள் கவனமுடன் வாகனத்தைச் செலுத்துவதோடு, சாலை நெரிசலைத் தடுக்குப் பொருட்டும், சக பயணிகளுக்கும், அவசர பாதையைப் பயன்படுத்துவோருக்கும் இடையூறு தராத வண்ணம் திட்டமிட்டுப் பயணித்தலும் மிக அவசியமாகும். எனவே, புனித நோன்பு பெருநாளைக் கொண்டாடும் அனைத்து அன்பர்களுக்கும் இதன்வழி எனது மனாமர்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, தொடங்கவிருக்கும் ஷாவால் மாதம் இசுலாமிய அன்பர்களுக்கும் வளம் பெருக்கும் மாதமாக அமையவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்” என்றும் சுப்ரா தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.