சிங்கப்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 3) அதிகாலையில் ஜோகூர் பாரு கடற்கரைப் பகுதியிலிருந்து, சிங்கப்பூருக்கு கடல் வழியாக நீச்சலடித்துக் கடக்க முயன்ற 36 வயது கொண்ட வங்காளதேசி ஒருவரை சிங்கை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சிங்கப்பூரையும், ஜோகூரையும் இணைக்கும் பாலம்….
அன்றைய தினம் அதிகாலையில் அந்த நபர் சிங்கப்பூரை ஜோகூரோடு இணைக்கும் கோஸ்வே பாலத்தின் அருகே, கடற்கரையோரமாக நடந்து சென்று கொண்டிருப்பதைப் பார்த்த சிங்கப்பூரின் கடலோர காவல் துறையினர், அது குறித்து, குடிநுழைவுத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை 3.35 மணியளவில் அந்த வங்காளதேச நாட்டவர் குடிநுழைவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கடல் வழியாக நீச்சலடித்து, சிங்கப்பூரை அடைய அந்த வங்காளதேசி திட்டமிட்டதாகவும் அந்த வேளையில்தான் கைது செய்யப்பட்டதாகவும் முதல்கட்ட விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளன.
சிங்கை குடிநுழைவுத் துறை சட்டங்களின்படி, அனுமதிக்கப்பட்ட காலத்தை விட கூடுதலாகத் தங்கியிருந்தாலோ, சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்தாலோ, ஒருவருக்கு 6 மாத சிறைத்தண்டனை மற்றும் மூன்று பிரம்படிகள் கொடுக்கப்படலாம்.