மாட்ரிட் – அர்ஜெண்டினாவின் உலகப் புகழ் பெற்ற காற்பந்து வீரர் லியோனல் மெஸ்சி, வருமான வரி ஏய்ப்புக்காக ஸ்பெயின் நாட்டு அரசாங்கத்தால் 21 மாத தண்டனையும், 2 மில்லியன் ஈரோ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளார்.
வரி ஏய்ப்புக்காக மெஸ்சி மீது சுமத்தப்பட்டிருந்த மூன்று குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று புதன்கிழமை ஸ்பெயின் நீதிமன்றம் ஒன்று இந்தத் தீர்ப்பை வழங்கியது.
மெஸ்சியின் தந்தை ஜோர்ஜ்ஜூக்கும் இதே போன்ற சிறைத் தண்டனையை வழங்கிய நீதிமன்றம், அவருக்கு 1.5 மில்லியன் ஈரோ அபராதத்தை விதித்தது.
ஆனால், ஸ்பெயின் நாட்டு சட்டங்களின் படி, வன்முறையான குற்றம் இழைக்காதவர்களாக இருந்தால், அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரையிலான தண்டனை விதிக்கப்பட்டால், அந்தத் தண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டியதில்லை.
இதன் காரணமாக, மெஸ்சியும் அவரது தந்தையும் சிறைத் தண்டனை அனுபவிக்கும் நிலைமை ஏற்படாது.
2007 முதல் 2009 வரை 4.7 மில்லியன் ஈரோ வருமானத்தைக் கணக்கில் காட்டாமல் ஸ்பெயின் நாட்டு அரசாங்கத்தை ஏமாற்றிய குற்றத்திற்காக 29 வயதான மெஸ்சியும், அவரது தந்தையும் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்தனர்.