ஜார்ஜ் டவுன் – கடந்த ஜூலை 10-ம் தேதி, பினாங்கு மாநிலத்தில் குளுகோர் வட்டாரத்தில் ஓர் இந்து ஆலயத்தில் உள்ள தெய்வ உருவச் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, கடந்த செவ்வாய்கிழமை மீண்டும் இரண்டு ஆலையங்களில் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.
மகாங்கில் அமைந்துள்ள ஸ்ரீ மகா முத்துமாரியம்மன் ஆலயத்திலும், செலாமா அருகேயுள்ள சுபஸ்ரீ சக்தி கனகவள்ளி ஆலயத்திலும் இந்த நாச வேலைகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த செவ்வாய்கிழமை காலை 9 மணியளவில் மகாங் ஆலயத்தில் சிலைகள் உடைக்கப்பட்டிருப்பது ஆலய நிர்வாகிகளால் கண்டறியப்பட்டுள்ளது.
அன்றைய நாளே மதியம் செலாமா அருகே உள்ள சுபஸ்ரீ சக்தி கனகவள்ளி ஆலயத்திலும் சிலைகள் உடைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் குற்றவியல் சட்டம் உடைத்தல் மற்றும் திருடுதல், சட்டப்பிரிவு 457-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக கூலிம் மாவட்ட துணை காவல்துறைத் தலைமை டிஎஸ்பி பாருடின் வாரிசோ தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.