புதுடில்லி – உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால், அம்மாநிலத்தின் முதல்வராக ஷீலா டிக்ஷிட் நியமிக்கப்படுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
டில்லியின் முன்னாள் முதல்வரான ஷீலா மீது சில ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணையில் இருக்கும் நிலையில் அவரை உத்தரப் பிரதேச மாநில முதல்வராக நியமித்துள்ளது காங்கிரஸ் கட்சி வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷீலா எளிமையானவராக இருந்தாலும், வயது முதிர்ந்தவர் என்பதால், கடுமையான உத்தரப் பிரதேச அரசியலைத் தாங்கிப் பிடிப்பாரா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
அதோடு, டில்லி ஆட்சிப் பொறுப்பை அரவிந்த் கெஜ்ரிவாலிடம் பறி கொடுத்துத் தோல்வியடைந்த ஷீலா மீண்டும் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக முன்மொழியப்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.
ஆளும் பாஜக சார்பாக இதுவரை முதல்வர் வேட்பாளராக யாரும் முன்மொழியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.