கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை கோலாலம்பூர் நெகாரா அரங்கத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற முதலாவது அனைத்துலக கொங்கு தமிழர் மாநாட்டைத் திறந்து வைத்து உரையாற்றிய பிரதமர் நஜிப் துன் ரசாக் மலேசியாவிலுள்ள இந்திய சமுதாயத்திற்கு உதவிகள் புரிவதற்கு அரசாங்கம் மேலும் அதிக கவனம் செலுத்தும் என உறுதியளித்தார்.
மலேசியா இந்த அளவுக்கு வளர்ச்சி பெறுவதற்கு அதனுடன் இரண்டறக் கலந்து, நாட்டை மேம்படுத்துவதற்கு பாடுபட்ட இந்தியர்களுக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு என்றும் நஜிப் தனது உரையில் கூறினார். மலேசியா தனித்துவம் மிக்க நாடாகவும், பலதரப்பட்ட அம்சங்களைக் கொண்ட நாடாகவும் திகழ்வதற்கு இந்தியர்களின் பங்களிப்பு பெருமளவில் இருந்தது என்றும் நஜிப் கூறினார்.
இந்த மாநாட்டில், மற்ற பிரமுகர்களுடன் மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியசும் கலந்து கொண்டார்.
“இந்நாட்டுத் தமிழர்கள் தங்களின் மொழியையும், கலாச்சாரத்தையும் வெற்றிகரமாகப் பாதுகாத்து வருகின்றார்கள் என்பதை நான் பெருமையுடன் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். மலேசியாவில் உள்ள தமிழர்கள் பாலர் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை, தமிழ் மொழியைப் பயில்வதற்கு இங்கு வாய்ப்பிருக்கின்றது” என்றும் நஜிப் மாநாட்டில் தெரிவித்தார்.
தற்போது மலேசியாவில் 524 ஆரம்பத் தமிழ்ப் பள்ளிகள் இருக்கின்றன என்று குறிப்பிட்ட நஜிப் அவை மலேசிய கல்வி அமைப்பின் ஓர் அங்கமாக செயல்படுகின்றன என்றும் தெரிவித்தார். அரசாங்கம் மேலும் ஆறு தமிழ்ப் பள்ளிகளை நிர்மாணிக்க அரசாங்கம் அங்கீகரித்திருக்கின்றது என்றும் நஜிப் கூறினார்.
கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய தமிழ் நாட்டின் மேற்குப் பகுதி பிரதேசம் முந்தைய காலத்தில் கொங்கு நாடு என்று அழைக்கப்பட்டது. இந்தப் பகுதியில் உள்ள தமிழர்களின் அனைத்துலக மாநாடு நேற்று கோலாலம்பூரில் தொடங்கியது.
பெருமளவில் இந்தியர்கள் தமிழ் பேசும் மலேசியாவில் கொங்கு தமிழர் மாநாடு நடத்தப்படுவது பொருத்தமானது என்றும் நஜிப் கூறினார். “இங்குள்ள மலையாளிகளும், தெலுங்கர்களும் கூட தமிழ் பேசுவார்கள்” என்றும் நஜிப் குறிப்பிட்டார்.
இந்த மூன்று நாள் அனைத்துலக மாநாடு நேற்று தொடங்கியது. மலேசிய கொங்கு தமிழர் சங்கத்தால் நடத்தப்படும் இந்த மாநாட்டில் ஏறத்தாழ 10,000 மலேசிய கொங்கு தமிழர்களும், 12 நாடுகளில் இருந்து 2,000 பேராளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
(படம்: அனைத்துலக கொங்கு தமிழர் மாநாட்டில் இடமிருந்து – எம். கேவியஸ், நஜிப் துன் ரசாக், மலேசிய நாமக்கல் சங்கத் தலைவர் டத்தோ கே.சுப்ரமணியம், தமிழகத்தின் கொங்கு நாடு மக்கள் கட்சியின் தேசியத் தலைவர் ஈஸ்வரன், இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி….)