Home Featured நாடு “கொங்கு தமிழர் மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் சுப்ராவுக்கு   அழைப்பு விடுக்கப்பட்டிருக்க வேண்டும்” – டத்தோ முருகையா

“கொங்கு தமிழர் மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் சுப்ராவுக்கு   அழைப்பு விடுக்கப்பட்டிருக்க வேண்டும்” – டத்தோ முருகையா

957
0
SHARE
Ad

Murugiah T. Datoகோலாலம்பூர் – கோலாலம்பூரில் சனிக்கிழமை தொடங்கிய கொங்கு தமிழர் மாநாட்டில் பங்கேற்க மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியத்துக்கு அரசாங்கத்தில் இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் அமைச்சர் என்ற முறையில் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டிருக்க வேண்டும் என பிரதமர் துறை முன்னாள் துணையமைச்சர் டத்தோ டி.முருகையா (படம்) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், மலேசிய நாட்டு அமைச்சரவையில் இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த டாக்டர் சுப்பிரமணியம் முக்கிய அமைச்சராக இடம் பெற்றுள்ளதையும், அவர் இந்தியச் சமுதாயத்துக்கு ஆற்றி வரும் பணிகளையும் சம்பந்தப்பட்டவர்கள் முன்பே கவனத்தில் கொண்டிருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Subramaniam Dr“கொங்கு தமிழர் மாநாடு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள். இப்படியொரு மாநாடு மலேசியாவில் நடத்தப்படுவது மிகப் பொருத்தமானது என பிரதமர் நஜிப் அவர்களே தெரிவித்துள்ளார். எனினும் பிரதமர் பங்கேற்ற, இந்தியர்கள் சார்ந்த இத்தகையதொரு நிகழ்வில், அவரது தலைமையில் இயங்கும் மலேசிய நாட்டு அமைச்சரவையில், இந்தியர்களைப் பிரதிநிதித்து இடம்பெற்றுள்ள டாக்டர் சுப்பிரமணியம் அவர்களும் பங்கேற்க விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்திருக்க வேண்டும்” என்றும் மஇகா மத்திய செயலவை உறுப்பினருமான டத்தோ முருகையா  தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“இம்மாநாட்டின் நோக்கம் குறித்தோ, இதர ஏற்பாடுகள் குறித்தோ கருத்துரைக்க வேண்டிய தேவை எழவில்லை. நல்ல நோக்கத்துடன் நடக்கும் எந்தவொரு மாநாடும் வரவேற்கத்தக்கதுதான். அதேசமயம் கொங்கு சமூகத்துக்கான மாநாடு என்ற போதிலும், இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படாதது வியப்பையும் வருத்தத்தையும் தருகிறது,” எனவும்  டத்தோ முருகையா கூறியுள்ளார்.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்து நூற்றுக்கணக்கான பேராளர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அப்பேராளர்களும், நாடறிந்த முக்கியத் தலைவரான டாக்டர் சுப்பிரமணியத்தை நேரில் சந்திக்கவும், அவரது கருத்துக்களைக் கேட்கவும் நிச்சயம் ஆவலுடன் இருந்திருப்பர் எனத் தெரிவித்துள்ளார்.

najib-kongu conference-KL-kayveasகொங்கு தமிழர் அனைத்துலக மாநாட்டின் தொடக்க விழாவில் நஜிப்…

“கொங்கு சமூகத்துக்கு நன்மை புரியும் நோக்கத்துடன் இந்த மாநாடு நடைபெறுகிறது. அந்த நோக்கம் நிறைவேற வேண்டும், கொங்கு சமூக சகோதரர்கள் சிறப்புற வேண்டும் என்பதே நமது விருப்பம். இதில் மாற்றுக் கருத்தில்லை.  எனினும் சமூகத்தின் நலன் கருதி நடத்தப்படும் மாநாட்டில், அச்சமூகத்தையும் கடந்து ஒட்டுமொத்த இந்தியச் சமுதாயத்துக்காக உழைத்து வரக்கூடிய, முதன்மைத் தலைவர் தேவையின்றிப் புறக்கணிக்கப்பட்டுள்ளாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் எத்தகைய சமூகமாக இருந்தாலும், இந்தியர்கள் என்ற வகையில் அவர்களுடைய மனக்குறைகளை, பிரச்சினைகளை, தேவைகளை எல்லாம் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லக்கூடிய இடத்தில் இருப்பவர் டாக்டர் சுப்ரமணியம்” என்றார் முருகையா.

“தங்களுக்காக நாட்டின் அமைச்சரவையில் குரல் கொடுக்கக்கூடிய ஒருவரை மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் எப்படி மறந்தனர்? என்பதே வியப்புக்குரிய விஷயம். இனி வரும் காலங்களிலேனும் சம்பந்தப்பட்ட சமூக, சமுதாயத் தலைவர்கள் இத்தகைய சங்கடங்கள், மன வருத்தங்களுக்கு இடமளிக்காத வகையில் செயல்பட வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்” எனவும் டத்தோ முருகையா மேலும் கூறியுள்ளார்.