Home Featured நாடு சோதிநாதன் தலைமையில் பழனிவேல் அணியினர் இரகசியக் கூட்டம்!

சோதிநாதன் தலைமையில் பழனிவேல் அணியினர் இரகசியக் கூட்டம்!

1005
0
SHARE
Ad

sothinathanகோலாலம்பூர் – இன்று திங்கட்கிழமை தலைநகரில் உள்ள ஓர் உணவகத்தில் பழனிவேல் அணியினரின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்ட இரகசியக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டதாகவும், அந்தக் கூட்டத்தில் பல முக்கிய அரசியல் ரீதியான முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், பழனிவேல் தரப்பைச் சேர்ந்த வட்டாரம் ஒன்று தெரிவித்தது.

இந்தக் கூட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர் என்றும் ஆனால், இந்தக் கூட்டத்திற்கு பழனிவேல் அழைக்கப்படவில்லை என்றும் அந்தத் தரப்பினர் தெரிவித்தனர்.

இனி அரசியல் ரீதியான அனைத்து முடிவுகளையும் டத்தோ சோதிநாதனே எடுப்பார் என்றும், அவரே இனி இந்த அணியினருக்கு தலைமையேற்று, பிரதிநிதித்து, மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ராவுடன் பேச்சு வார்த்தை நடத்துவார் என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிகின்றது.

#TamilSchoolmychoice

மீண்டும் மஇகாவோடு இணைய பெரும்பாலோர் ஆதரவு

MIC-logoஇந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலோர் இனியும் நீதிமன்றப் போராட்டங்களைத் தொடர்வதை விட்டுவிட்டு, மீண்டும் கட்சிக்கு கௌரவமாகத் திரும்புவதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டத்திற்கு தலைமையேற்ற சோதிநாதனும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடத்தி மீண்டும் அனைவரும் கட்சிக்குத் திரும்ப வேண்டும், நீதிமன்ற வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற இரண்டு நோக்கங்களோடு செயல்பட வேண்டும் என்ற நோக்கில் கூட்டத்தில் வலியுறுத்தினார் என்றும் தெரிகின்றது.

மஇகா 70ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுகின்ற தருணத்தில் மீண்டும் கட்சியில் ஒற்றுமை ஏற்படுத்தும் நோக்கில் இரு தரப்புகளும் இணையும் வாய்ப்பு ஏற்படலாம் என்றும் பழனிவேல் தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், பழனிவேல் கலந்து கொள்ளாத இந்தக் கூட்டம் குறித்து அவருக்குத் தெரியுமா –

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளுக்கு  நேரடியாக அவரது அங்கீகாரம் இருக்கின்றதா –

மீண்டும் அவரது அணியினரோடு கட்சிக்குத் திரும்ப அவர் ஒப்புக் கொண்டுள்ளாரா என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை.