கோலாலம்பூர் – 2012ஆம் ஆண்டில் பிரதமர் நஜிப் துன் ரசாக் விடுத்த உத்தரவின் காரணமாகத்தான் 1எம்டிபி விவகாரத்தின் இறுதிக்கட்ட அறிக்கை இரகசிய ஆவணமாக வகைப்படுத்தப்பட்டது என அரசாங்கத் தலைமை கணக்காய்வாளர் அம்ப்ரின் புவாங் கூறியுள்ளார்.
நேற்று கோலாலம்பூரில் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லிக்கு எதிராக அதிகாரத்துவ இரகசியக் காப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் ஒரு சாட்சியாக வாக்குமூலம் தந்தபோதே அம்ப்ரின் மேற்கண்டவாறு கூறினார்.
விசாரணையின் போது அரசாங்க வழக்கறிஞர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அம்ப்ரின், பிரதமர் தனக்கு வழங்கிய அதிகாரத்துவ உத்தரவின்படி 1எம்டிபி மீதான அறிக்கையை தான் இரகசியக் காப்பு சட்டத்தின் கீழ் வகைப்படுத்தியதாக கூறினார்.
இதற்காக பாதுகாப்பு இலாகாவின் ஆலோசனையையும் தாங்கள் பெற்றதாகவும் அம்ப்ரின் கூறியுள்ளார்.
இருப்பினும், தலைமை கணக்காய்வாளரின் 1எம்டிபி அறிக்கை இணையத்தில் கசிந்து விட்டது என்றும் அம்ப்ரின் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.