கோலாலம்பூர் – முறையான அனுமதியின்றி கடந்த வெள்ளிக்கிழமை, கோலாலம்பூரில் இருந்து லங்காவிக்கு பறந்த புதிய விமானச் சேவை நிறுவனமான சுவாசா ஏர்லைன்ஸ் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
அவ்விமான நிறுவனம் தனது வர்த்தகப் போக்குவரத்து இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன், மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையத்திடமிருந்து, முழு வான் சேவை அனுமதியைப் (ஏஎஸ்பி) பெறவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இது குறித்து உள்நாட்டு விமானப் போக்குவரத்துத்துறை இயக்குநர் அசாருடின் அப்துல் ரஹ்மான் கூறுகையில், கடந்த 2015-ம் ஆண்டு, டிசம்பர் 15-ம் தேதி அந்நிறுவனம் தனது தற்காலிக அனுமதியை (வான் இயக்க சான்றிதழ் – ஏஓசி) மட்டுமே பெற்றிருந்தது, முழு அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆண்டு, கடந்த ஜனவரி 18-ம் தேதி, அந்நிறுவனம் தனது முழு அனுமதிக்காக விண்ணப்பம் செய்தது என்றும், கடந்த ஜூலை 22-ம் தேதி தான் அதற்கு ஏஓசி அனுமதி வழங்கப்பட்டது என்றும் அசாருடின் தெரிவித்துள்ளார்.
எனினும், ஏஓசி, ஏஎஸ்பி இந்த இரண்டு அனுமதியைப் பெற்ற பின்பே அந்நிறுவனம் வர்த்தகப் போக்குவரத்துச் சேவையைத் தொடங்க முடியும் என்றும் அசாருடின் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சுவாசா ஏர்லைன்ஸ் அச்சம்பவம் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் அசாருடின் தெரிவித்துள்ளார்.