கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய தேசியப் பாதுகாப்பு மன்றச் சட்டம், வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் மலேசியாவில் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 24-ம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அச்சட்டம் அமலுக்கு வரும் நாளை, அரசாங்கப் பதிவேட்டில் குறிப்பிட்டார். அது கடந்த ஜூலை 14-ம் தேதி கூட்டரசு அரசாங்கப் பதிவேட்டின் இணையதளத்திலும் வெளியானது.
இதனிடையே, மலேசியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இச்சட்டம் அமலுக்கு வருவதாக நஜிப் தெரிவித்துள்ளார்.
“இது போன்ற சட்டங்களை அமல்படுத்துவதற்காக சில தரப்பினர் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் மலேசியர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் இது போன்ற நடவடிக்கைகளுக்காக எனது அரசாங்கம் எப்போதும் மன்னிப்புக் கேட்காது.” என்றும் நஜிப் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தச் சட்டம் மாமன்னரின் ஒப்புதலைப் பெறாமலேயே அமலுக்கு வருகின்றது. அதோடு, கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற ஆட்சியாளர்கள் மாநாட்டில், இச்சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வர வேண்டுமென தெரிவித்தும் கூட, அம்மாற்றங்களைச் செய்யாமல் இச்சட்டம் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.