மணிப்பூர் – மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெறக் கோரி, கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக உண்ணாவிரதம் இருந்து வந்த இரோம் ஷர்மிளா தனது போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
எனினும், தனது உண்ணாவிரதப் போராட்டத்தால் எந்தவொரு ஆக்கப்பூர்வமான மாற்றமும் ஏற்படாததை அடுத்து, தேர்தலில் போட்டியிட்டு அதன் மூலம் தனது போராட்டத்தை நடத்த இரோம் ஷர்மிளா முடிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘எனது போராட்டத்துக்கு அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு நேர்மறையான பதிலும் கிடைக்கவில்லை. எனவே 16 ஆண்டுகால உண்ணாவிரதத்தை வரும் ஆகஸ்ட் 9-ம் தேதியோடு முடிவுக்கு கொண்டு வந்துவிட்டு, தேர்தல் மூலம் தொடர்ந்து போராடப்போகிறேன்’’ என்று இரோம் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.
மேலும், தான் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மணிப்பூரில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.