குவாந்தான் – கோத்தா பாரு ஏயான் வணிக வளாகத்தில் கைகடிகாரக் கடை நடத்தி வந்த லீ கும் சுவான் என்பவரின் கடைக்கு வந்த கோத்தா பாரு மாநகர சபை அதிகாரிகள், அவரது கடைக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த இரு பதாகைகள் (Posters) மிகவும் கவர்ச்சியாக இருப்பதாகக் கூறி அவருக்கு அபராதம் விதித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை மாலை 3.40 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
அந்த இரு பதாகைகளில், ஒரு பதாகையில் இந்தியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயும், மற்றொரு பதாகையில் மாடல்கள் இருவரின் புகைப்படமும் இருந்துள்ளது.
இந்நிலையில், மசீச இளைஞர் பிரிவுத் தலைவர் சோங் சின் வூன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோத்தா பாரு மாநகராட்சி அதிகாரிகளின் இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
“அது ஒரு விளம்பரம் மட்டுமே, அதற்காக அவர்கள் அபராதம் விதிப்பார்களா?, அவர்கள் கட்டுக்கடங்காமல் போகிறார்கள். நாம் பல்லின மக்கள் வாழும் நாட்டில் வாழ்கிறோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உள்ளூர் அதிகாரிகள் அந்த அபராத நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்று சோங் சின் வூன் தெரிவித்துள்ளார்.