சென்னை – கத்தார் நாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கு நாளை சனிக்கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
இந்நிலையில், அதனைத் தடுக்கும் வகையில் இந்தியா சார்பில் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை இந்தியாவின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஏகே அகமது தெரிவித்துள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டு மூதாட்டி கொலை வழக்கில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
அதில் புதுக்கோட்டையைச் சேர்ந்த சுப்பிரமணியன், விருதுநகரைச் சேர்ந்த செல்லத்துரை ஆகிய இருவருக்கும் மரண தண்டனையும், சேலத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், நாளை சனிக்கிழமை சுப்பிரமணியனுக்கும், செல்லத்துரைக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அத்தண்டனையிலிருந்து அவர்களைக் காப்பாற்ற இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.