புதுடெல்லி – இந்தோனிசியாவில் போதைப் பொருள் வழக்கில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள 10 பேரில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குர்தீப் சிங்கும் ஒருவர்.
இந்தோனிசியாவின் பட்டியலின் படி, இன்று தண்டனை நிறைவேற்றப்பட்ட 4 பேரில் குர்தீப் சிங்கும் இருந்திருக்கக் கூடும். ஆனால், இறுதி நேரத்தில் அதில் மாற்றம் செய்யப்பட்டு குர்தீப்புக்குப் பதிலாக வேறு ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.
இந்நிலையில், அவரைக் காப்பாற்றும் முயற்சிகளில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சிவ்ராஜ் இறங்கியுள்ளார்.
எனினும், குர்தீப் சிங் உள்ளிட்ட 10 கைதிகள், மரண தண்டனை நிறைவேற்றப்படும் இடமான நூசாகம்பாங்கன் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டனர் என்றும், அவர்களது சடலத்தை எடுத்துச் செல்ல சவப்பெட்டிகளும் தயாராகிவிட்டன என்றும் இந்தோனிசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், வாழ்வா சாவா போராட்டத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் குர்தீப் சிங் (வயது 48) தான் காப்பாற்றப் படக்கூடும் என நம்புகின்றார்.
கடந்த 2004 -ம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் வழக்கில் குர்தீப் சிங் இந்தோனிசியாவில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.