கோலாலம்பூர் – மலேசியாவில் கடந்த இரண்டு மாதங்களில் நடந்த 10-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களையடுத்து மலேசியாவில் துப்பாக்கிக் குண்டுகள் துளைக்காத (Bullet proof) கார் கண்ணாடிகளுக்கு மவுசு அதிகரித்திருக்கிறது.
பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முக்கியப் பிரமுகர்களும், தொழிலதிபர்களும், தனிநபர்களும் தங்களது கார்களில் குண்டு துளைக்காத கண்ணாடியைப் பொருத்திக் கொள்ள கார் நிறுவனங்களை நாடி வருகின்றனர்.
மேலும், சில அரசாங்க அலுவலகங்கள் கூட அது போன்ற கண்ணாடிகளை தங்களது வாகனங்களில் பொருத்த ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகின்றது.
இது குறித்து ஐஎம்எஸ் மோட்டார்ஸ்போர்ட் நிர்வாக இயக்குநர் ஹோ சின் எப்எம்டிக்கு அளித்து பேட்டியில், அது போன்ற கார் கண்ணாடிகளைப் பொருத்த குறைந்தது 140,000 ரிங்கிட் முதல் 2 லட்சம் ரிங்கிட் வரையில் செலவாகும் என்று தெரிவித்துள்ளார்.
பார்ப்பதற்கு சாதாரணக் கண்ணாடி போல் தெரியும் அவை, துப்பாக்கிக் குண்டுகள் முதல் இயந்திரத் துப்பாக்கி குண்டுகள் வரை அனைத்தையும் தாங்கும் வல்லமை கொண்டவை என்றும் ஹோ சின் தெரிவித்துள்ளார்.