துபாய் – திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் நோக்கி 300 பயணிகளுடன் சென்ற எமிரேட்ஸ் விமானம் தரையிறங்கும்போது விமான ஓடுதளத்தில் மோதியதில் தீப்பிடித்தது. இருப்பினும் அந்த விமானத்தில் இருந்த 300 பயணிகளும் மயிரிழையில் உயிர் தப்பினர்.
விமானத்தில் இருந்த 300 பயணிகளில் 226 பேர் இந்தியர்களாவர். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து காலை 10.19க்குப் புறப்பட்ட ஈகே 521 ( EK521) என்ற வழித் தட எண் கொண்ட எமிரேட்ஸ் விமானம் பிற்பகல் 12.50 மணிக்கு துபாய் அனைத்துலக விமானத்தில் தரையிறங்கியது.
ஆனால் அவசரமாகத் தரையிறங்கும்போது விமான ஓடுதளத்தில் மோதி அந்த போயிங் 777 ரக விமானம் தீப்பிடித்தது. உடனடியாக அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் உயிர்தப்பினர்.
விமான விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. விமானம் தரையிறங்கும்போது பயன்படுத்தப்படும் விசை (கியர்) சரியாக இயங்காத காரணத்தால் விமானம் தரையில் மோதும் நிலைமை ஏற்பட்டது எனத் தெரிகின்றது.
இந்த விபத்து குறித்து தெரிவித்த பயணிகள் இன்னும் ஓரிரு நிமிடங்கள் தாமதித்திருந்தாலும் பலத்த உயிர் சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளனர்.